வாரியத் தலைவர் பதவி வாங்கித் தருவதாக தவெக நிர்வாகியிடம் ரூ.20 லட்சம் பேரம்: ஹரியானாவில் மர்ம நபர் கைது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வட்டச் செயலாளரிடம் அரசு வாரியத் தலைவர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் பேரம் பேசிய மோசடி நபர் ஒருவரை சென்னை மெரினா காவல் நிலைய போலீஸார் ஹரியானாவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ரோகன் என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சிப் பணிகள் காரணமாக இவர் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவ்வாறு அலுவலகத்திற்குச் சென்று வந்தபோது, அங்கு இவருக்கு 'ஜாய்' என்ற நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. தான் டெல்லியில் வசிப்பதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தான் மிகவும் நெருங்கிய நண்பர் என்றும் ரோகனிடம் ஜாய் நம்பும்படி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜாய், தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தவெக ஆட்சியில் ஏதேனும் ஒரு அரசு வாரியத்தில் தலைவர் பதவி (Board Chairman Post) வாங்கித் தர முடியும் என்றும், அதற்குப் கைமாறாக ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார். ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்த ரோகனுக்கு, நாளாக நாளாக ஜாயின் நடவடிக்கைகள் மீது திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜாயைப் பற்றி ரகசியமாக விசாரித்தபோது, அவருக்கும் தவெக தலைமைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதும், அவர் திட்டமிட்டு ஏமாற்ற முயன்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தவெக நிர்வாகி ரோகன், உடனடியாக சென்னை மெரினா காவல் நிலையத்தில் இதுகுறித்து முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின் ஹரியானா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த மோசடி ஆசாமியான ஜாயைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடிப் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


AthibAn Tv