Type Here to Get Search Results !

அமராவதி பெயரில் ஊழல்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'மாவிகுன்' தான் ஆந்திராவின் தலைநகரம்” - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!



அமராவதி பெயரில் ஊழல்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'மாவிகுன்' தான் ஆந்திராவின் தலைநகரம்” - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!

அமராவதி:

ஆந்திரப் பிரதேசத்தில் மீண்டும் தலைநகர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (YSRCP) தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி நகரின் பெயரில் பெருமளவில் ஊழல் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தாடேபள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவின் தலைநகராக 'மாவிகுன்' (MAVIGUN) உருவாக்கப்படும். மச்சிலிப்பட்டினம், விஜயவாடா, குண்டூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் பகுதிகளை இணைத்து உருவாக்கப்படும் இந்த 'மாவிகுன்' திட்டமே அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியின் முதன்மை முழக்கமாக இருக்கும்" எனத் தெரிவித்தார். அமராவதி ஊழலுக்கு இயற்கையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட 'மாவிகுன்' திட்டம் மட்டுமே தகுந்த பதிலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2014-ல் ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்த பிறகு, ஹைதராபாத் அதன் தலைநகரானது. அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியைத் தலைநகராக அறிவித்தார். பின்னர் 2019-ல் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டார். தொடர்ந்து, 2024-ல் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சிப் பொறுப்பேற்றதும் அமராவதியைத் தலைநகராக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தற்போது மீண்டும் தலைநகர் அரசியலைத் தொடங்கியுள்ளார்.

"ஆந்திராவில் நடப்பது காட்டு ராஜ்ஜியம்" - சந்திரபாபு நாயுடு அரசு மீது கடும் சாடல்!

செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு அரசை கடுமையாக விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி, "ஆந்திராவில் காவல் துறையை சந்திரபாபு நாயுடு முற்றிலும் அரசியல் மயமாக்கி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக மாற்றும் புதிய போக்கை இந்த அரசு உருவாக்கியுள்ளது. அமராவதியில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களையும், அங்கு நடக்கும் ஆடம்பர ஊழல்களையும் நேரில் கண்டறிய எங்கள் குழு பெனுமக்காவுக்குச் சென்றது. ஆனால், அரசைக் கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி, சிறைக்கு அனுப்பித் துன்புறுத்துகிறார்கள். ஆந்திராவில் தற்போது ஒரு காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது" என்று சாடினார்.

மேலும், தலித் கிறிஸ்தவர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "ஒருவர் வேறொரு மதத்திற்கு மாறுவதால் அவரது சமூக அந்தஸ்து மாறிவிடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் வெறுப்புணர்வைப் பரப்பி மத உணர்வுகளைத் தூண்டும் போது சந்திரபாபு நாயுடு மவுனம் காப்பது ஏன்? தலித் கிறிஸ்தவர் விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்றும் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.