Type Here to Get Search Results !

மின்வாரியத்தின் ₹2.47 லட்சம் கோடி கடனைக் குறைக்க 'பிரதமரின் சூரிய வீடு திட்டம்': தமிழக அரசுக்கு வல்லுநர்கள் கோரிக்கை!


மின்வாரியத்தின் ₹2.47 லட்சம் கோடி கடனைக் குறைக்க 'பிரதமரின் சூரிய வீடு திட்டம்': தமிழக அரசுக்கு வல்லுநர்கள் கோரிக்கை!

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடுமையான நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் ‘பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை’ (PM-Surya Ghar: Muft Bijli Yojana) தமிழக அரசு கூடுதல் மானியங்களுடன் ஊக்கப்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் 25-ம் தேதி மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, கடந்த 2021-26 காலகட்டத்தில் மட்டும் மின்வாரியத்திற்கு ₹34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தக் கடன் சுமை ₹2,47,130 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், சூரியசக்தி (சோலார்) உற்பத்தியை அதிகரிப்பதே இதற்குச் சிறந்த தீர்வாக முன்வைக்கப்படுகிறது.

தற்போது தவெக அரசு வீடுகளுக்கான இலவச மின்சாரத்தை 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக அதிகரித்துள்ளதால், வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் ₹5.29 முதல் ₹5.39 வரை கொடுத்து, சராசரியாக 17,000 மெகா வாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க நிலம் கையகப்படுத்துதல், ஊழியர்கள் நியமனம் எனப் பல சவால்கள் உள்ளதால், நுகர்வோர்களையே மின் உற்பத்தியாளர்களாக மாற்றும் மத்திய அரசின் சூரிய வீடு திட்டத்தை மாநில அரசு கையில் எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

கூடுதல் செலவை ஏற்குமா தமிழக அரசு? சோலார் திட்டத்தின் பலன்கள்:

மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் 1 மற்றும் 2 கிலோ வாட் சோலார் கட்டமைப்புகளுக்கு 60 சதவீத மானியமும் (முறையே ₹30,000 மற்றும் ₹60,000), 3 கிலோ வாட் அமைப்பிற்கு 40 சதவீத மானியமும் (₹78,000) வழங்கப்படுகிறது. 2 கிலோ வாட் சோலார் அமைப்பதன் மூலம் இரு மாதங்களுக்கு 480 முதல் 600 யூனிட் வரை தடையின்றி மின்சாரம் பெற முடியும். இருப்பினும், ஆரம்பக்கட்டக் கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கு மானியத் தொகையை விட ஒன்றரை மடங்கு கூடுதலாகச் செலவாவதால் பொதுமக்கள் இத்திட்டத்திற்குத் தயக்கம் காட்டுகின்றனர். இந்த கூடுதல் செலவை அல்லது ஒரு பகுதியைத் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் சோலார் மானியம் வழங்கினால் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் சோலார் அமைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "மின்சார வாகனங்கள், ஏசி மற்றும் பிரிட்ஜ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின்தேவை பெருமளவு உயரும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் போது, அரசின் வெளிச்சந்தை கொள்முதல் செலவு முற்றிலும் குறையும். இரவு நேரத் தேவைக்காக, வீடுகளில் கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமிக்க மின்கலங்களுக்கு (பேட்டரி) மாநில அரசு மானியம் தர வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத இந்த பசுமைத் திட்டத்தை அரசு ஒரு முதலீடாகக் கருதி ஊக்கப்படுத்தினால், சோலார் மற்றும் பேட்டரி தயாரிப்புத் தொழிலும் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியடையும்" என்றனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.