அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.வளர்மதியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ள சூழலில், எஸ்.வளர்மதியும் நாளை தவெகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அவர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.வளர்மதி, கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை 'தவெக'வில் இணைகிறார்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி!
முன்னதாக, அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையப் போவது உறுதியான நிலையில், எஸ்.வளர்மதியும் அவர்களுடன் இணைந்து தவெகவில் ஐக்கியமாகப் போவதாகத் தகவல் பரவியது. இதனை இன்று செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கரும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
தமிழகத்தில் தவெக தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடந்து முடிந்த கையோடு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து தவெக நோக்கி நகர்வதும், அதற்குப் போட்டியாக அதிமுக தலைமை அவர்களைக் கட்சியை விட்டு நீக்கி வருவதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


AthibAn Tv