"அனைத்து இடங்களிலும் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது" - சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை!
மதுரை: அரசுத் துறைகளின் அனைத்து இடங்களிலும் ஊழல் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பெரும் வேதனை தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் மீதான புகார்களை விசாரிக்கும் ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரர்களின் மனுக்கள் மீது 4 வார காலத்திற்குள் விசாரித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகள் மிகவும் கவனமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, "இந்த புகார்களை விசாரிக்கும் ஒழுங்கு நடவடிக்கைத் தீர்ப்பாயங்கள், மாவட்ட நீதிபதி தகுதியில் உள்ள நீதித்துறை அலுவலர்கள் அல்லது ஐஏஎஸ் (IAS) அதிகாரி தலைமையில் மட்டுமே அமைய வேண்டும். ஊழல் வழக்குகளைத் திறம்படக் கண்காணிப்பதற்கு மாநிலத்தில் ஒரு நிரந்தர ஊழல் தடுப்பு ஆணையர் (Anti-Corruption Commissioner) இருப்பது அவசியமாகும். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் நிரந்தர ஊழல் தடுப்பு ஆணையர் இல்லை என்பதும், மூத்த அதிகாரி ஒருவர் அந்தப் பதவியைக் கூடுதலாகக் கவனித்து வருகிறார் என்பதும் வருத்தமளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"அரசியல் கட்சிகளின் கூற்றுக்கு மாறாக உள்ளது உண்மை நிலை" - நீதிபதி புகழேந்தி சாடல்
தொடர்ந்து ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசிய நீதிபதி பி.புகழேந்தி, "ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வரும்போது தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்கின்றன. ஆனால், களத்தில் உண்மை நிலை வேறுவிதமாக உள்ளது. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் ஆழமாகப் படர்ந்துள்ளது. வெறும் வார்த்தைகளால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது; முறையான அர்ப்பணிப்புடனும், தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளாலும் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்" என்று சாடினார்.
மாநிலத்தில் ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமானால், அதற்குரிய ஊழல் தடுப்பு ஆணையத்தையும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையையும் (DVAC) தன்னாட்சியுடன் வலுப்படுத்துவது மட்டுமே ஒரே வழி என்றும், அப்போதுதான் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முடியும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.


AthibAn Tv