கோவையில் அனுமதியற்ற மகளிர் விடுதிகள் அதிகரிப்பு: மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக நுகர்வோர் அமைப்பு புகார்!
கோவை: கோவை மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி, விதிகளுக்குப் புறம்பாக இயங்கும் தனியார் மகளிர் விடுதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நுகர்வோர் அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். கோவையில் உள்ள ஏராளமான கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் பயிலும், பணியாற்றும் பெண்களைக் குறிவைத்து, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துப் பலர் அனுமதியின்றி விடுதிகளாக நடத்தி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறுகையில், "மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் காப்பகங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும் என கடந்த 2014-ம் ஆண்டே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத் துறைச் சான்று உள்ளிட்டவற்றைச் சமர்ப்பித்தால் மட்டுமே விடுதிகளைப் பதிவு செய்ய முடியும். ஆனால், கோவையில் இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. தங்குபவர்களின் வருகைப் பதிவேடு, சிசிடிவி (CCTV) கேமரா கண்காணிப்பு, தரமான உணவு போன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி புற்றீசல் போல இந்த விடுதிகள் இயங்குவதால், பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். சமூக நலத்துறை இதில் உடனே தலையிட வேண்டும்" என்றார்.
விதியை மீறினால் 'சீல்' வைக்கப்படும்: மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் அதிரடி எச்சரிக்கை!
இந்த விவகாரம் குறித்துக் கோவை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் இதுவரை 316 மகளிர் விடுதிகள் அரசிடம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன; மேலும் 3 விடுதிகளின் பதிவு நடைமுறையில் உள்ளது. முன்னதாக 100 விடுதிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுதி உரிமையாளர்களை அழைத்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தனர்.
மேலும், மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விதிமீறி இயங்கும் விடுதிகளைக் கண்டறிய வட்டார வாரியாக அதிகாரிகள் மூலம் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அரசுப் பதிவு இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் முறையான அனுமதி பெறத் தவறினால் அந்த விடுதிகளுக்கு உடனடியாக 'சீல்' வைக்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


AthibAn Tv