Type Here to Get Search Results !

கன்யாகுமரி அணுக்கனிமத் திட்ட அனுமதி நீட்டிப்பு: தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!


கன்யாகுமரி அணுக்கனிமத் திட்ட அனுமதி நீட்டிப்பு: தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) திட்டத்திற்கு மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த நவம்பர் 2024-ல் நடந்த தவெக செயற்குழுக் கூட்டத்தில், இத்திட்டத்தை 'தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் நாசகாரத் திட்டம்' என எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், தற்போது இத்திட்டம் ஜூன் 10, 2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், இறுதி நாளில் இதற்கு மீண்டும் உயிர்ப்பூட்டி அரசாணை வெளியிட்டிருப்பது தவெக அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" என்று சாடியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கடலோரக் கிராமங்களின் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் தாது மணலில் இருந்து மோனசைட், சிர்கான் உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும் என சீமான் எச்சரித்துள்ளார். இந்த அகழ்வினால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பால் சுற்றுப்புறக் கிராம மக்கள் புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும், கதிரியக்கக் கழிவுகளைக் கடலில் கொட்டுவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழியும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம்" - அமைச்சர் டி.கே.பிரபு மீது விமர்சனம்!

தொடர்ந்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபுவை விமர்சித்துப் பேசிய சீமான், "கடந்த மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளைப் பார்வையிட்டு, ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் விளம்பரம் தேடிக் கொண்டிருந்தார் அமைச்சர் டி.கே.பிரபு. ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகம் தான் தற்போது கன்னியாகுமரியின் கடலோரப் பகுதியை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளைச் சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒன்றிய அரசின் ஐஆர்இஎல் நிறுவனத்திற்குச் சிவப்பு கம்பளம் விரிப்பது தான் அமைச்சர் பிரபுவின் அதிரடி நிர்வாகமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் எதிர்ப்பிற்கு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, கடந்த செப்டம்பர் 2025-ல் அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால், மாநில அரசோ கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியைப் பெற வசதியாக ஐஆர்இஎல் நிறுவனத்திற்குத் தன்னிச்சையாகக் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும் என்றும், வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மாபெரும் களப்போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.