“சீருடையுடன் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது” - சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு கூடுதல் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
சென்னை: "போலீஸார் சீருடை அணிந்திருக்கும் போது கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது" என்று சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி, போக்குவரத்து காவலர்களுக்கு வாக்-டாக் (Walkie-Talkie) மூலம் அதிரடியான ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகச் சமீபத்தில் பொறுப்பேற்ற சாமுண்டீஸ்வரி, காவலர்களுக்கான பணிப் பொறுப்புகள் குறித்துப் பேசுகையில், "சட்டம்-ஒழுங்கு போலீஸாரை விட, பொதுமக்களைத் தினசரி அதிக அளவில் சந்திக்கும் வாய்ப்பு போக்குவரத்து போலீஸாருக்கே உள்ளது. தற்போது பெரும்பாலான பொதுமக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், போலீஸாரின் நல்ல செயல்களையும், அதேநேரம் செய்யும் தவறான செயல்களையும் உடனுக்குடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுகின்றனர். எனவே, பொதுமக்களிடம் போலீஸார் மிகவும் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
சீருடையின் மாண்பு முக்கியம்: தொடர்ந்து போலீஸாரின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "சிலர் சீருடையைச் சுத்தமாக அணியாமல் பணியில் ஈடுபடுவது கவலைக்குரியதாக உள்ளது. இனி அனைத்து போக்குவரத்து காவல் நிலையங்களிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், பெண் போலீஸார் பணியில் இருக்கும்போது நகைகள் அணியக் கூடாது என்ற விதிமுறை உள்ளது, அதை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" என்றார்.
சர்ச்சையைத் தவிர்க்க புதிய விதிமுறை: மேலும், தான் கண்ட ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய கூடுதல் ஆணையர், "மெரினா கடற்கரை காமராஜர் சாலை வழியாக நான் ஒருமுறை சென்றபோது, போக்குவரத்து போலீஸ் ஒருவர் தனது சீருடையுடன் கடையில் மீன் வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பணியில் இருந்தாலும் சரி, அல்லது பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் சரி, சீருடை அணிந்த நிலையில் எந்தவொரு கடையிலும் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் முறையாகப் பணம் கொடுத்துப் பொருட்கள் வாங்கினாலும், சீருடையில் இருப்பதால் பொதுமக்கள் அதனை 'இலவசமாக' அல்லது 'மிரட்டி' வாங்குவதாகத் தவறாகக் கருதும் வாய்ப்பு உள்ளது" என்று விளக்கமளித்தார்.
ஒரு போலீஸ்காரரின் தவறான அல்லது அலட்சியமான செயல், ஒட்டுமொத்தக் காவல் துறையின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், அனைத்துக் காவலர்களும் தங்களது நடத்தை மற்றும் ஒழுக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்த உத்தரவுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

AthibAn Tv