Type Here to Get Search Results !

அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்புப் பணிகளைத் துரிதமாக முடிக்க வேண்டும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் ப.ராஜ்குமார் அதிரடி உத்தரவு!


அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்புப் பணிகளைத் துரிதமாக முடிக்க வேண்டும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் ப.ராஜ்குமார் அதிரடி உத்தரவு!

சென்னை: சென்னையை அடுத்த கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் ஆகிய திட்டப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை, எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்திற்குள் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னையை அடுத்த கண்ணகி நகர் மற்றும் எழில்நகர் பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்போது பெரிய அளவிலான மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த களப்பணிகளின் தரம் மற்றும் வேகம் குறித்து வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் கு.ப.கிருஷ்ணன், வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ப.சரவணன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள், பொறியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ப.ராஜ்குமார், “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கண்ணகி நகரில் 15,656, எழில் நகரில் 6,000 மற்றும் எழில்நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 2,048 என மொத்தமாக 23,704 அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் 188 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதில், பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக கண்ணகி நகர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 9,152 குடியிருப்புகளின் சீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 6,504 குடியிருப்புகளுக்கான சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன" என்று விளக்கினார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், எழில் நகர் திட்டப் பகுதியில் உள்ள 3,232 குடியிருப்புகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டிலும், எழில் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 1,152 குடியிருப்புகளில் ரூ.8.19 கோடி மதிப்பீட்டிலும் புனரமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், இந்த சீரமைப்புப் பணிகள் அனைத்தையும் எவ்விதக் காலதாமதமும் இன்றி தரம் குறையாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வாரியப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வின் மூலம் சென்னை புறநகர் பகுதி அரசு குடியிருப்புகளின் மேம்பாட்டுப் பணிகள் மேலும் வேகம் பெற்றுள்ளதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.