குரூப்-1 தேர்வு காலியிடங்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் இளைஞர் பெருமன்றம் கடிதம்!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க உத்தரவிடக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள், தமிழக முதல்வர் விஜய்க்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடப்பாண்டுக்கான அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவாக உள்ளதால், தேர்வுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், "தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் மட்டுமே அரசுப் பணிக்குச் செல்வதற்கான பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு குடும்ப மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு, இரவு பகலாகத் தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், துணை ஆட்சியர் (Deputy Collector), உதவி ஆணையர் (Assistant Commissioner), மாவட்டப் பதிவாளர் (District Registrar) உள்ளிட்ட உயரிய பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் நடப்பாண்டு குரூப்-1 தேர்வுக்கு, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக, வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவெக-வின் தேர்தல் வாக்குறுதியை நினைவு கூர்ந்துள்ள அவர், "'இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய அரசாகத் தவெக அரசு செயல்படும்; அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்படும்' என்று நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு, தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அறிவிப்பு நேர்மாறாக அமைந்துள்ளது. எனவே, போட்டித் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு குரூப்-1 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தி மறுஅறிவிப்பு வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கை ஒட்டுமொத்த அரசுப் பணித் தேர்வர்களிடையேயும் பலத்த ஆதரவைப் பெற்றுள்ளது.


AthibAn Tv