சென்னையில் துணிகரம்: லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.ஐ-யைத் தாக்கி செல்போன் பறிக்க முயற்சி - தனிப்படை அமைப்பு!
சென்னை: சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை சப்-இன்ஸ்பெக்டரை (எஸ்.ஐ) மர்ம நபர்கள் சிலர் வழிமறித்துத் தாக்கி, அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடிக்கப் பரங்கிமலை போலீஸார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை ஆலந்தூர், வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (39). இவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், ஆதம்பாக்கம் நியூ காலனி 1-வது தெருவில் உள்ள ஒரு மருந்தகத்திற்குச் சென்று மாத்திரைகளை வாங்கிக்கொண்டு, பரங்கிமலை சுரங்கப்பாதை சர்வீஸ் சாலை வழியாக நடந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த அந்தப் பகுதியில் அவர் நடந்து சென்றபோது, 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ரகசியமாகப் பின்தொடர்ந்து வந்துள்ளது. திடீரென அக்கும்பல் துரைராஜை வளைத்துப்போட்டுத் தாக்கி, அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறிக்க முயன்றது. எனினும், நிலை குலையாத துரைராஜ் கொள்ளையர்களிடம் இருந்து தனது செல்போனை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டு, வலியால் சத்தமாக அலறிப் கூச்சலிட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்தை நோக்கி ஓடி வந்தனர். ஆட்கள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள், செல்போனைப் பறிக்க முடியாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இத்தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஐ துரைராஜ், சிகிச்சைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துப் பரங்கிமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாகச் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

AthibAn Tv