பங்குச்சந்தை எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்: ஆனந்த் சீனிவாசன் வலியுறுத்தல்!

Dina AthibAn
0

பங்குச்சந்தை எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்: ஆனந்த் சீனிவாசன் வலியுறுத்தல்!

சென்னை: பங்குச்சந்தையின் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (Futures and Options - F&O) எனப்படும் வழித்தோன்றல் வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் (Retail Traders) ஈடுபடுவதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வர்த்தகத்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் நாட்டின் தற்போதைய விலைவாசி நிலவரங்கள் குறித்துப் பேசினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பங்குச்சந்தையில் ஃபியூச்சர் அண்டு ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் சில்லறை வர்த்தகர்களை அனுமதிக்கக் கூடாது. இதில் ஏற்படும் கடுமையான நஷ்டத்தினால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன. இதற்குத் தடை விதித்தால் மட்டுமே நடுத்தரக் குடும்பங்கள் கடன் வாங்குவது முற்றிலும் நிற்கும். அண்மையில் தர்மபுரியில் எஃப் அண்ட் ஓ வர்த்தக நஷ்டத்தால் மனைவி மற்றும் குழந்தையைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதைப் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாது. எனவே, மக்களின் குடும்பங்களைப் பாதுகாக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் தடையை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய அவர், "இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக 120 டாலர் வரை சென்ற சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை, தற்போது 69 டாலர் வரை சரிந்துள்ளது. போருக்கு முன்பு இருந்ததை விட இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு முன்வரவில்லை. பெட்ரோல் விலையை 100 ரூபாயில் இருந்து 108 ரூபாயாக உயர்த்தியவர்கள், தற்போது விலையைக் குறைப்பது பற்றிப் பேசுவதே இல்லை. அதேபோல், உயர்த்தப்பட்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலையும் குறைக்கப்படவில்லை" என்று சாடினார்.

மேலும், டீசல் விலையைக் குறைத்தால் மட்டுமே அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்றும், இந்த விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) அனைவரும் விரைவில் பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளதாகவும் ஆனந்த் சீனிவாசன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!