கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் இன்று அமோனியா வாயு அகற்றும் பணி: முன்னேற்பாடுகளை ஆட்சியர் நேரில் ஆய்வு!
பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தைத் தொடர்ந்து, அங்குள்ள எஞ்சிய வாயுவைப் பாதுகாப்பான முறையில் அகற்றும் பணி இன்று (ஜூலை 4) மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்புத் துறை மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். வாயுவை அகற்றும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்துக் கேட்டறிந்த அவர், அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு 99525 90412 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அலாதி மஹாராணா ஜுவாங்கா (29) என்ற பெண் தொழிலாளி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த அமோனியா வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாகப் பெரியபாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோர் ஜாமீன் கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, 18 பேர் உயிரிழக்கக் காரணமான இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.என். உதயகுமாரின் கடுமையான ஆட்சேபனையை ஏற்று, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

AthibAn Tv