ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாக்களை முடக்கி விஷமத்தனம்: சர்ச்சைக்குரிய 2 சீன செயலிகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Dina AthibAn
0


ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாக்களை முடக்கி விஷமத்தனம்: சர்ச்சைக்குரிய 2 சீன செயலிகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பொதுமக்களின் முக்கியப் போக்குவரத்து வாகனமாக இ-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaws) அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், இ-ரிக்ஷாக்களை ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் தூரத்திலிருந்தே கட்டுப்படுத்தி முடக்கும் அதிர்ச்சிப் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதற்குப் பயன்படுத்தப்படும் 'பிஏடி-பிஎம்எஸ்' (BAT-BMS) மற்றும் 'எபோச் லி-ஐயன்' (Epoch Li-ion) ஆகிய இரண்டு சர்ச்சைக்குரிய சீன செயலிகளையும் உடனடியாக நீக்குமாறு மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த இ-ரிக்ஷாக்களில் பொருத்தப்பட்டுள்ள சீன தயாரிப்பு லித்தியம் பேட்டரிகளில் ப்ளூடூத் வசதி உள்ளது. ஆனால், இவற்றில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததைச் சாதகமாக்கிக் கொள்ளும் சில சமூக விரோதிகள், இந்தச் சீன செயலிகளைப் பயன்படுத்தி 10 முதல் 15 மீட்டர் தூரத்திலிருந்தே வாகனங்களை அத்துமீறிக் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக, இந்தச் செயலிகளில் உள்ள ‘டிஸ்-சார்ஜ் சுவிட்ச்’ (Discharge Switch) அல்லது ‘சார்ஜ் சுவிட்ச்’ (Charge Switch) ஆகிய ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்து, சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்களைத் திடீரென நின்றுவிடச் செய்கின்றனர். ஆரம்பத்தில் வேடிக்கையாகத் தொடங்கப்பட்ட இந்த விஷமத்தனம், தற்போது போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் விபத்து அபாயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு விபரீதமாக மாறியுள்ளது.

இந்த மர்ம நபர்களின் செயலால் இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் தங்களின் தினசரி வருமானத்தை இழந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கி வருவதால், போதிய வருமானமின்றி வாகன உரிமையாளர்களுக்கு வாடகை கூடக் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏற்கனவே தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது மத்திய அரசு இந்தச் செயலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!