திருப்பந்தியூர் செல்வ விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி: 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் சிறப்பு அலங்காரம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள திருப்பந்தியூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற செல்வ விநாயகர் கோயிலில், ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, செல்வ விநாயகர் சுவாமிக்கு 18,000 கடலை உருண்டைகளைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 9 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த அரிய அலங்காரத்தில் செல்வ விநாயகர் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்தார்.
இவ்விழாவை முன்னிட்டு மாலை 5 மணியளவில் வழித்துணை விநாயகருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களைப் பரவசப்படுத்தும் வகையிலான திருக்கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்குக் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தச் சிறப்பு வழிபாட்டு விழாவில் திருப்பந்தியூர், பண்ணூர், கொட்டையூர், மப்பேடு, கீழச்சேரி, உளுந்தை, பேரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

AthibAn Tv