"ஒரே குண்டில் முக்கிய தலைவர்களைக் கொல்ல முடியும்" – அதிபர் ட்ரம்பின் ஆணவப் பேச்சுக்கு ஈரான் கடும் கண்டனம்!
டெஹ்ரான் / யெரெவான்: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் கூடியிருந்த ஈரானிய நாட்டுத் தலைவர்களை ஒரே குண்டில் அமெரிக்காவால் வீழ்த்த முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியதற்கு ஈரான் நாடு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ட்ரம்பின் இந்த ஏளனப் பேச்சுக்கு ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாகப் பதிலடி கொடுத்துள்ளது. அதில், “மனிதர்களை வேண்டுமானால் குண்டு வீசி உங்களால் கொல்ல முடியும், ஆனால் அவர்களின் மனதில் திடமாகப் பதிந்துள்ள கொள்கைகளை ஒருபோதும் உங்களால் கொல்ல முடியாது; அமெரிக்காவிற்கு நாகரிகமோ, வரலாறோ அல்லது கண்ணியமோ இல்லை” என்று ஈரான் திட்டவட்டமாகச் சாடியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் அரசு சார்பில் மிக பிரம்மாண்டமான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈரானின் தற்போதைய முக்கியத் தலைவர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் மற்றும் மக்கள் கூட்டத்தைக் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “கமேனியை மக்கள் வெறுப்பதாகவே நான் நினைத்தேன், அங்கு மக்கள் சிந்துவது போலி கண்ணீராக இருக்கலாம்” என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், “அங்கு ஈரானின் ஒட்டுமொத்த முக்கியத் தலைமைகளும் கூடியுள்ளனர். நான் நினைத்தால் ஒரே குண்டில் அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட முடியும். ஆனால், நாம் அதைச் செய்யப்போவதில்லை; ஏனெனில், அதற்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே எவரும் இருக்க மாட்டார்கள்” என்று மிகவும் ஏளனமாகத் தெரிவித்திருந்தார். சர்வதேச ராஜதந்திர நெறிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ள ட்ரம்பின் இந்த அச்சுறுத்தலுக்குத்தான் தற்போது ஈரான் தரப்பிலிருந்து மிகக் கடுமையான எதிர்வினை கிளம்பியுள்ளது.

AthibAn Tv