சிறார் பாலியல் வீடியோ விளம்பர விவகாரம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு அதிரடி நோட்டீஸ் – ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்க உத்தரவு!
புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சிறார் பாலியல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்கள் குறித்த விளம்பரங்கள் வெளியாவது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கமளிக்கக் கோரி அதன் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு (Meta) மத்திய அரசு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய ‘யூசர்நேம்’ (Username) அம்சம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்திலும் மத்திய அரசு தனது கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் விளம்பரக் கொள்கைகளின்படி பாலியல் சார்ந்த வீடியோக்களுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய சூழலில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இத்தகைய சட்டவிரோத விளம்பரங்கள் அதிக அளவில் உலா வருவதாகப் புகார்கள் மற்றும் செய்திகள் வெளியாகின. இந்த விளம்பரங்கள் மூலமாகப் பார்வையாளர்கள் டெலிகிராம் (Telegram) சேனல்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அங்குப் பாலியல் மற்றும் சிறார் பாலியல் வீடியோக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, மெட்டா நிறுவனத்திற்கு உடனடியாகச் சம்மன் அனுப்பி உரிய விளக்கம் கோருமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மெட்டா நிறுவனத்திற்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பாலியல் வீடியோக்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தங்களது தளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மிகத் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

AthibAn Tv