தனியார் பேருந்துகளில் தன்னிச்சையான கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனியார் பேருந்து நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனியார் பேருந்து நிறுவனங்கள் நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் எவ்வித முன் அனுமதியுமின்றி தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். முன்பு 10 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின்றி பயணிகளுக்கான கட்டணத்தை இவ்வாறு உயர்த்துவது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அரசின் விதிகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வுக்கு எதிராகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்றும் அவர் சாடியுள்ளார். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு தனியார் பேருந்து நிறுவனங்களின் இந்த சட்டவிரோத கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

AthibAn Tv