சௌகார்பேட்டை தங்கக்கட்டி கொள்ளை வழக்கு: மேலும் 2 பேர் அதிரடி கைது - மூளையாகச் செயல்பட்டவரைத் தேட தனிப்படை அமைப்பு!
சென்னை: சென்னை சௌகார்பேட்டையில் கத்திமுனையில் 1.5 கிலோ தங்கக்கட்டி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இரண்டு கூட்டாளிகளை யானைக்கவுனி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்திற்குத் திட்டமிட்டு, மூளையாகச் செயல்பட்டுத் தப்பியோடிய முக்கிய நபரைப் பிடிக்கக் காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட 1.5 கிலோ தங்கக்கட்டியும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையைச் சேர்ந்த அங்கித்திலிப் மோர் (27) என்பவர், சௌகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முதல் மாடியில், தனது அக்காவின் கணவருக்குச் சொந்தமான தங்கம் உருக்கும் மற்றும் தரப் பரிசோதனை செய்யும் கடையை நிர்வகித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி காலை, வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த 1.5 கிலோ தங்க நகைகளை உருக்கி, அங்கித்திலிப் மற்றும் கடை ஊழியர்கள் தங்கக்கட்டியாகத் தயாரித்து வைத்திருந்தனர்.
அன்று மதியம், முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரெனக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டித் தாக்கியுள்ளது. பின்னர், மேஜையில் இருந்த 1.5 கிலோ தங்கக்கட்டியைப் பறித்துக்கொண்டு அக்கும்பல் தப்பியோடியது. அப்போது அங்கித்திலிப் மற்றும் சக ஊழியர்கள் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் துரத்திச் சென்று, கொள்ளையர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மற்ற இருவர் தங்கக்கட்டியுடன் தப்பினர்.
பிடிபட்ட நபர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (என்ற) அருண் (23) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளிகளான யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் (24) மற்றும் ஹேராம் (என்ற) ரமணா (24) ஆகிய இருவரையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து முழுமையாகத் திட்டமிட்டுக் கொடுத்த சூத்திரதாரியைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

AthibAn Tv