“திமுகதான் குதிரை பேரத்தை ஆரம்பித்தது!”: இடைத்தேர்தல் புறக்கணிப்பு மற்றும் எடப்பாடிக்கு வைகோ அதிரடி பதிலடி!
திருநெல்வேலி: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் மீதும் அதன் அரசியல் அணுகுமுறைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "இன்று குதிரை பேரம் பற்றிப் பேசும் திமுகதான், உண்மையில் அதைத் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கம்பம் ராமகிருஷ்ணனைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, அடுத்த நான்காவது நாளே திமுகவில் சேர்த்துக் கொண்டார்கள். திமுக எங்களை எப்போதும் மிரட்டுவது போலவே நடத்தி, உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்தம் செய்தது. எங்களை அவர்கள் மிகவும் மோசமாக நடத்தியதால்தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம்" என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் அவர்களின் தலைமையிலான ஆட்சி குறித்துப் பாராட்டிப் பேசிய வைகோ, "முதல்வர் விஜய் தலைமையில் அண்மையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் கூட்டம் மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றது. அங்கு நடந்த விவாதங்களை வெளியில் பேசுவது அரசியல் முறையல்ல. தமிழ்நாட்டில் தற்போது லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு நல்லாட்சி நடைபெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் ஊழல் கொடிகட்டிப் பறந்தது, அதைத் தற்போது முதல்வர் விஜய் முற்றிலும் இல்லாமல் ஆக்கியுள்ளார். இதனால் முன்பைவிட தற்போது முதல்வருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளும் விஜய் அவர்களின் ஆட்சிதான் தமிழகத்தில் தடையின்றி நடைபெறும், அடுத்த தேர்தலிலும் அவரே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்" என்று அசைக்க முடியாத நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இதையெல்லாம் பேசவில்லை என்று எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "அப்போது நாங்கள் இதனைப் பேசியிருந்தால், மறுநாளே கூட்டணியை விட்டு வெளியேற்றப்பட்டிருப்போம்; வேறு கூட்டணிக்குச் சென்றிருந்தாலும் எங்களை விமர்சித்திருப்பார்கள். மற்ற கட்சிகளுக்குத் தனிச் சின்னமும், அதிக தொகுதிகளும் வழங்கிய திமுக, எங்களை மட்டும் ஒடுக்க நினைத்தது. கடந்த 32 ஆண்டுகளாகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மதிமுகவை நடத்தி வருகிறோம், எத்தனையோ கட்சிகள் தொடங்கி மறைந்துவிட்டன. தமிழக வெற்றிக் கழகத்தையும் நான் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாகவே பார்க்கிறேன். முதல்வர் விஜய்யிடம் ஒரு தனி அரசியல் வசீகரம் உள்ளது, அதனால்தான் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் அவரைத் தங்களை ஈர்க்கும் தலைவராக ஏற்று ஆதரிக்கிறார்கள். அவர் மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளில் உறுதியாக நிற்கிறார்" என்று புகழாரம் சூட்டினார்.
கட்சியை விட்டு விலகிச் சென்றவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடனும் வேதனையுடனும் பகிர்ந்துகொண்ட வைகோ, "ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியதற்குப் பின்னால் ஒவ்வொரு நியாயமான காரணம் உள்ளது. எங்களை விட்டு விலகிச் சென்றவர்களை விமர்சிப்பது என் வழக்கமல்ல. இருப்பினும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்க; அவர்கள் என் முதுகில் குத்தவில்லை, என் நெஞ்சில்தான் குத்திவிட்டார்கள். ஆனால், என் உயிரைக் கொடுக்கும் உண்மைத் தொண்டர்கள் இன்னும் என்னுடன்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த இயக்கத்தைக் காப்பற்றுவார்கள். வரவிருக்கும் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை" என்று வைகோ தனது பேட்டியில் தீர்க்கமாகக் குறிப்பிட்டார்.


AthibAn Tv