“டிட்வா புயல் பாதிப்பு!”: இந்தியா வழங்கும் ரூ.4,050 கோடி நிதியுதவியைப் பெற இலங்கை அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
கொழும்பு: கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையைக் கொடூரமாகத் தாக்கிய 'டிட்வா' புயல் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக, இந்திய அரசு அறிவித்த 4,050 கோடி ரூபாய் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த டிட்வா புயல் காரணமாக 643 பேர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏற்கனவே மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வரும் இலங்கை அரசால், இப்புயல் பேரிடரால் ஏற்பட்ட உள்கட்டமைப்புச் சேதங்களைச் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கை அரசு அவசரக் கடன் உதவி கோரியிருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அண்டை நாடு என்ற முறையில் இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு 'ஆபரேஷன் சாகர் பந்த்' என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கியது. இதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராகப் புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சேதங்களை பார்வையிட்டார். பின்னர், இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, இலங்கைக்கு 4,050 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது. இந்தியா வழங்கும் இந்த மொத்த தொகையில், 3,150 கோடி ரூபாய் சலுகைக் கடனாகவும், எஞ்சிய 900 கோடி ரூபாய் முழு மானியமாகவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நிதியுதவியானது இலங்கையின் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அத்தியாவசியத் துறைகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக, அந்நாட்டின் நிதி அமைச்சர் என்ற முறையில் அதிபர் அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த ஆலோசனைக் கோப்பிற்கு இலங்கை அமைச்சரவை தற்போது ஒருமனதாக ஒப்புதல் வழங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த நிதியுதவி இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனப் பலராலும் பார்க்கப்படுகிறது.


AthibAn Tv