Type Here to Get Search Results !

“மார்பிங் சாதாரண டிஜிட்டல் குறும்பு அல்ல!”: போலி சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆக்ரோஷ உத்தரவு


“மார்பிங் சாதாரண டிஜிட்டல் குறும்பு அல்ல!”: போலி சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆக்ரோஷ உத்தரவு

மதுரை: "ஒரு பெண்ணின் கண்ணியத்தை போலி சமூக ஊடக கணக்குகளின் விருப்பத்திற்கு விட்டுவிட முடியாது. மார்பிங் (புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிப்பது) என்பது சாதாரண டிஜிட்டல் குறும்பு அல்ல; அது ஒரு பெண்ணின் நற்பெயர், தனிமனித உரிமை மற்றும் மனநலப் பாதுகாப்பின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கடுமையான தாக்குதல்" என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், "சிங்கப்பூரில் பணியாற்றி வரும் எனது சகோதரியின் புகைப்படங்களைச் சிலர் ஆபாசமாகச் சித்தரித்து (Morphing) சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்தப் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டுகின்றனர். இது தொடர்பாக நான் அளித்த புகாரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தீவிரமாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிபதி கே.விக்டோரியா கவுரி, சைபர் குற்றங்களில் காவல்துறை காட்டும் காலதாமதம் ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துவிடும் என்று எச்சரித்தார். "தொழில்நுட்பம் என்பது மனித கண்ணியத்தைப் பாதுகாக்கப் பயன்பட வேண்டுமே தவிர, அதைச் சீர்குலைக்கும் ஆயுதமாக மாற்றக் கூடாது. டிஜிட்டல் தடயங்கள் எளிதாக அழிக்கப்படக் கூடியவை; இணைய முகவரிகளும் சமூக ஊடகக் கணக்குகளும் உடனடியாக நீக்கப்படலாம் என்பதால் சைபர் குற்றங்களில் விரைவான நடவடிக்கை மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட பெண் வெளிநாட்டில் (சிங்கப்பூர்) வசிக்கிறார் என்பதற்காக இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளின் கடமை எந்த வகையிலும் குறைந்துவிடாது" என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுபோன்ற மார்பிங் மற்றும் பணம் பறிக்கும் குற்றங்கள் கடுமையான சைபர் குற்றங்களாகவே கருதப்படும் என்று குறிப்பிட்ட நீதிபதி, "புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படாதது மட்டுமின்றி, அந்த ஆபாசப் படங்கள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தொடர்ச்சியான மன உளைச்சலையும் கண்ணிய இழப்பையும் ஏற்படுத்தும். எனவே, காவல்துறையின் நடவடிக்கை என்பது வெறும் குற்றவியல் வழக்கோடு நின்றுவிடக் கூடாது; டிஜிட்டல் ஆதாரங்களை உடனடியாகப் பாதுகாப்பதோடு, அந்த ஆபாச உள்ளடக்கங்களை இணையத்தில் இருந்து உடனடியாக அகற்றவும் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் இந்தப் புகாரை முறையாகப் பரிசீலித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிரடி உத்தரவிட்டார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.