புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவுக்கு மீண்டும் ஓர் அக்னி பரீட்சை: சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்ட அரசியல் வரலாற்றில் கட்சி மாறுதல்களும், புதிய அரசியல் நகர்வுகளும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. கடந்த காலங்களில் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் வென்று அமைச்சரான சு.திருநாவுக்கரசர் மற்றும் திருமயம் தொகுதியில் வென்று அமைச்சரான எஸ்.ரகுபதி ஆகியோர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாற்றுக்கட்சிகளுக்குச் சென்றனர். இத்தகைய முன்னோடிகளின் வரிசையில், புதுக்கோட்டையில் ஒரு முறையும் விராலிமலையில் 4 முறையும் என போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, அதிமுகவின் செல்வாக்குமிக்க முகமாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் இவர் வெற்றி பெற்றாலும் அதிமுக தோல்வியடைந்ததால், பொதுச் செயலாளர் பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதன் காரணமாக, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேற்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக விளங்கிய இவர் விலகியிருப்பதால் அந்த இடத்தை யாராலும் எளிதாக நிரப்ப முடியாது என்றும், கட்சியை நிர்வகிப்பது கடினம் என்பதால் பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், கடந்த காலங்களில் திருநாவுக்கரசர், ரகுபதி போன்ற ஜாம்பவான்கள் விலகிய பிறகும் புதுக்கோட்டையில் அதிமுக மீண்டு வந்து சாதனை படைத்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். விஜயபாஸ்கர் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்த பிறகு தான் மாவட்டத்தில் அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டு, கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் இவர் மட்டுமே வென்றார் என்றும், விராலிமலை தொகுதியைச் சேர்ந்த ஒருதரப்பினர் மட்டுமே தவெக-வுக்குச் சென்றுள்ளதால் கட்சிக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகாரத்தின் மையமாக விளங்கிய தலைவர்கள் தடம் மாறுவது புதுக்கோட்டைக்கு புதிதல்ல என்றாலும், சி.விஜயபாஸ்கரின் இந்த அதிரடி நகர்வு புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவைப் பலவீனப்படுத்துமா அல்லது புதிய தலைமை உருவாக வழிவகுக்குமா என்பதை வரும் தேர்தல் களமே தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


AthibAn Tv