அக்டோபர் 15-ல் உலகளவில் வெளியாகும் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி ப்ரோமோ
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் தசராவை முன்னிட்டு, இப்படம் வரும் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, அனிருத்தின் அதிரடியான பின்னணி இசையுடன் ரஜினிகாந்த் கம்பீரமாக நடந்து வரும் பிரத்யேக ப்ரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சுராஜ் வெஞ்சரமூடு, மேக்னா ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், முதல் பாகத்தைப் போலவே மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமார் ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.நிர்மல் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி ₹600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவிலான குற்றப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தைத் தொடர்ந்து, கமல் ஹாசனின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.


AthibAn Tv