அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்: 5 அன்பு கட்டளைகள் வெளியீடு!

Dina AthibAn
0

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்: 5 அன்பு கட்டளைகள் வெளியீடு!

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் இமயமலைப் பகுதியில், 12,730 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான புனித யாத்திரை நேற்று முன்தினம் முறைப்படி தொடங்கியது. ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பக்தர்களின் முதல் குழுவைக் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் பக்தர்களுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி, "இந்த புனித யாத்திரை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நாட்டின் ஒற்றுமை உணர்வை அனைவரிடத்திலும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்களை அன்போடும் உபசரிப்போடும் வரவேற்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், யாத்திரை சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம், போலீஸார், பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எனது நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த யாத்திரையின் போது இயற்கையைப் பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களைப் பக்தர்கள் அனைவரும் தங்களின் கடமையாகப் பின்பற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி 'அன்புக் கட்டளைகளாக' விடுத்துள்ளார். அவை பின்வருமாறு:

  • இயற்கை பாதுகாப்பு: இமயமலைப் பகுதி மற்றும் புனித யாத்திரைப் பாதைகளின் தூய்மையைப் பேணி, அவற்றின் இயற்கை அழகைப் பக்தர்கள் பாதுகாக்க வேண்டும்.

  • அறிவுரைகளைப் பின்பற்றுதல்: பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் வழங்கும் அனைத்து அறிவுரைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

  • உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு: ஜம்மு-காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் வகையில், அங்குள்ள உள்ளூர் தயாரிப்புகளைப் பக்தர்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும்.

  • மரக்கன்று நடுதல்: புனிதப் பயணம் முடித்து வெற்றிகரமாக வீடு திரும்பியதும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தங்களுக்கு அன்புக்குரியவர்களின் பெயரில் தலா ஒரு மரக்கன்றை நட வேண்டும்.

  • நல்லிணக்கம்: யாத்திரையின் போது சக பக்தர்களிடம் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த ஐந்து அன்புக் கட்டளைகளையும் பக்தர்கள் தங்களின் பயணத்தின் போது தவறாமல் பின்பற்றி, புனிதமான அமர்நாத் யாத்திரையைச் சிறப்பான முறையில் நிறைவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!