Type Here to Get Search Results !

ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!


ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வரும் ஜூலை 3-ம் தேதி வாக்கில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும், மேலும் வடக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (ஜூலை 2) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் நீடிக்கின்றன. குறிப்பாக, ஜூலை 3-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களிலும், ஜூலை 4-ம் தேதி கோவை, நீலகிரி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம் மற்றும் கடந்த 24 மணி நேர மழைப் பதிவு:

தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதற்கிடையே, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர மழை அளவுகளின்படி, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 8 சென்டிமீட்டரும், வால்பாறையில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மேலும், சின்கோனா, உபாசி, சோலையார் மற்றும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.