சென்னை கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் 'தவெக' தோழமைக் கட்சிகள் கூட்டம்: 3 முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்!
சென்னை: தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் தலைமையில், அக்கட்சியின் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோவளத்தில் நடைபெற்றது. தவெக தலைமையிலான புதிய கூட்டணி உருவாக்கம் மற்றும் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், "தவெக தலைமையில் ஒரு புதிய கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்துவிட்டது. இதில் அனைத்து தோழமைக் கட்சிகளும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே. மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு இயற்கையான கூட்டணி இதுவென்று தோழமைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எங்கள் கட்சியின் கொள்கைகளுடன் உடன்பட்டு, ஒன்றிப்போகும் கட்சிகளுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி அமைப்போம்; அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் கூட்டணி பெயர்: அடுத்த கூட்டத்தில் இறுதி வடிவம்!
தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்தச் சந்திப்பை ஒரு 'நல்ல தொடக்கம்' என்று வர்ணித்தார். மேலும், "இன்றைய கூட்டத்தில் கூட்டணி குறித்து விரிவாகப் பேசினோம். வரும் நாட்களில் இந்தக் கூட்டணிக்கென ஒரு தனியான 'ஒருங்கிணைப்புக் குழு' (Coordination Committee) அமைக்கப்பட வேண்டும், கூட்டணிக்கான 'குறைந்தபட்ச செயல்திட்டம்' (Minimum Common Programme) வகுக்கப்பட வேண்டும் மற்றும் இந்த புதிய 'கூட்டணிக்கான பெயர்' ஆகிய மூன்று மிக முக்கிய விஷயங்கள் குறித்து அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். தவெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும்போது, தேசிய அளவில் 'இண்டியா' (INDIA) கூட்டணியில் இணைவது குறித்தும் முடிவு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இடதுசாரிகள் கூட்டாக சந்திப்பு: இந்த அதிகாரப்பூர்வ தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. இருப்பினும், இன்று காலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இன்றைய தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், தவெக அரசுக்கான தங்களது ஆதரவு என்றும் தொடர்ந்து நீடிக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.


AthibAn Tv