இந்து திருமணத்திற்கு சடங்குகள் அவசியம்; வெறும் பதிவு மட்டும் போதாது: குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
அகமதாபாத்: இந்து திருமணச் சட்டத்தின்படி, அக்னியை ஏழு முறை சுற்றி வரும் 'சப்தபதி' உள்ளிட்ட வழக்கமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் முறையாக நடத்தப்படுவது கட்டாயமாகும் என்றும், வெறும் திருமணப் பதிவுச் சான்றிதழை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு திருமணம் செல்லுபடியாகும் எனக் கருத முடியாது என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் கவுஷல் சோனார் என்பவர், தனக்குத் தெரியாமல் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் மோசடியாகத் திருமணச் சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், அந்தத் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் இலேஷ் வோரா மற்றும் ஆர்.டி.வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி குறித்து மனுதாரர் கூறுகையில், "எதிர்வாதியான பெண்ணை நான் முறைப்படி திருமணம் செய்யவில்லை. இந்து மதச் சடங்குகள் எதுவும் எங்களுக்குள் நடக்கவில்லை. குடும்ப நல நீதிமன்றம் இந்தத் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க மறுத்துவிட்டது" எனக் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இருவருக்கும் இடையே திருமணச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை என்பதையும், அவர்கள் கணவன் - மனைவியாக வாழவில்லை என்பதையும் அந்தப் பெண்ணே ஒப்புக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர். இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 7-ன் படி, அடிப்படைச் சடங்குகள் இல்லாத இந்தத் திருமணம் செல்லாதது என்று கூறி, குடும்ப நல நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
"திருமணம் என்பது கொண்டாட்டமோ அல்லது வணிகப் பரிவர்த்தனையோ அல்ல" - நீதிபதிகள் நெகிழ்ச்சி
தீர்ப்பின் போது இந்து தர்மத்தில் திருமணத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய நீதிபதிகள், "இந்து சட்டத்தின்படி திருமணம் என்பது ஒரு புனிதச் சடங்கு அல்லது சம்ஸ்காரமாகவே கருதப்படுகிறது. இது ஒரு புதிய குடும்பத்தை உருவாக்குவதற்கான அஸ்திவாரம் ஆகும். இதில் மனைவி கணவனின் சரிபாதியாகவும், சம பங்கு கொண்ட தனித்துவமான அடையாளமாகவும் அங்கீகரிக்கப்படுகிறார். திருமணம் என்பது வெறும் பாடல், நடனம், விருந்து உபசரிப்புக்கான நிகழ்வோ அல்லது வணிக ரீதியான பரிவர்த்தனையோ (Commercial transaction) அல்ல" என்று குறிப்பிட்டனர்.
மேலும், இந்திய சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருமண அமைப்பின் புனிதத் தன்மையைப் பற்றி, திருமண பந்தத்தில் இணையவிருக்கும் இளைஞர்களும் இளம் பெண்களும் கவனமாகச் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் முறையாகச் செய்யப்படும் போது, அது இரு நபர்களுக்கு இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஆரோக்கியமான பிணைப்பை உருவாக்குவதுடன், ஒரு தனிநபர் முக்தி அல்லது பேரின்பத்தை அடைய உதவும் ஆன்மீக நிகழ்வாகவும் மாறுகிறது என குஜராத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் விரிவாக விவரித்துள்ளது.

AthibAn Tv