அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம்: வழக்குக்குப் பின் தினசரி டெபாசிட் ரூ.24 லட்சமாக உயர்வு – எஸ்.ஐ.டி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Dina AthibAn
0


அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம்: வழக்குக்குப் பின் தினசரி டெபாசிட் ரூ.24 லட்சமாக உயர்வு – எஸ்.ஐ.டி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

அயோத்தி: உத்தர பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் காணிக்கை திருட்டு வழக்கு தொடர்பாகச் சிறப்பு விசாரணைக்குழு (SIT) நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு வரை, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கி கணக்குகளில் தினசரி சராசரியாக 16 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காணிக்கை பணம் டெபாசிட் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால், திருட்டுப் புகார் வெளியாகி விசாரணை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தற்போது தினசரி டெபாசிட் தொகை 24 லட்சம் ரூபாய் முதல் 26 லட்சம் ரூபாயாக அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்தத் தரவுகளின் அடிப்படையில், இதற்கு முன்பு தினமும் 6 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான காணிக்கைப் பணம் முறைகேடாகத் திருடப்பட்டிருக்கலாம் என்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களின் துல்லியமான அளவும், அதன் மதிப்பும் வழக்கமான நடைமுறைகளின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிர்வாகக் குறைபாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிகள், கோயிலிலிருந்து திருடிய நகைகளை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றியிருக்கலாம் என்றும் எஸ்.ஐ.டி சந்தேகிக்கிறது. ஏனெனில், இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் எதுவும் இன்னும் மீட்கப்படவில்லை. நகைகளாகப் பெற்ற காணிக்கைகள் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் தற்போதைய நடைமுறைகள் குறித்து எஸ்.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், நகைகள் தொடர்பான ஆவணங்களையும், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ (SPMCIL) உடனான பரிவர்த்தனை தொடர்பான கோப்புகளையும் ஆய்விற்காக வரவழைத்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட உலோகங்களின் முழுமையான விவரங்களையும் வழங்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இதற்கிடையே, ராமர் கோயில் அறக்கட்டளை சமர்ப்பித்த வருடாந்திர வரவு செலவு மீதான தணிக்கைக் கணக்குகளிலும் (Audit accounts) பல்வேறு முறைகேடுகள் மற்றும் தவறுகள் இருப்பதைச் சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்துள்ளது. இதனைத் தீர விசாரித்து உறுதி செய்ய, அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோரிடமிருந்து சில முக்கிய ஆவணங்களை வழங்குமாறு எஸ்.ஐ.டி உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் முன்னாள் உள்துறை செயலாளரான எஸ்.லக்ஷ்மி நாராயணா தன் மனைவி சரஸ்வதியுடன் கடந்த 2024 ஏப்ரல் மாதம் அயோத்திக்கு வந்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட 147 கிலோ எடையுள்ள 522 பக்க 'ராமச்சரிதமனாஸ்' புனித நூலை ராமபிரான் கோயிலுக்காகச் சம்பத் ராயிடம் நேரில் வழங்கியுள்ளார். கோயிலின் கருவறையில் வைக்கப்படுவதாகக் கூறிப் பெற்றுக்கொள்ளப்பட்ட அந்தப் புனித நூல் தற்போது காணாமல் போயுள்ளதாகவும், அதற்குரிய ரசீதும் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ள விவகாரம், இந்தத் திருட்டு வழக்கில் மேலும் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!