தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 94-வது ஆண்டு விழா: முரளி விஜய் பங்கேற்றுப் பரிசுகளை வழங்கினார்!
சென்னை / சேப்பாக்கம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) 94-வது ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் டிஎன்சிஏ தலைவர் டி.ஜே. ஸ்ரீனிவாசராஜ் முறைப்படி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, சங்கத்தின் செயலாளர் பகவான்தாஸ் ராவ் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து, கடந்த ஆண்டில் டிஎன்சிஏ-வின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தமிழக அணி படைத்த சாதனை விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கிச் சிறப்பித்தார். விழாவில் பேசிய முரளி விஜய், தமிழகத்தில் அடிமட்ட அளவில் (Grassroot level) கிரிக்கெட் விளையாட்டைக்கொண்டு போய்ச் சேர்க்கத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எடுத்து வரும் தொடர் முயற்சிகளையும், தொலைநோக்கு முன்னெடுப்புத் திட்டங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2025-26-ஆம் ஆண்டில் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கும் கேடயங்களும் நற்சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. விழாவின் நிறைவாகத் டிஎன்சிஏ பொருளாளர் ஆர்.ரங்கராஜன் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் டிஎன்சிஏ நிர்வாகிகள் சி.மாரீஸ்வரன், கே.ஸ்ரீராம், எம்.குமரேஷ், பல்வேறு மாவட்டச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

AthibAn Tv