“பாஜக அரசின் அரசியல் நெருக்கடி!”: 20 ஆண்டுகளாக வசித்த சொகுசு அரசு பங்களாவை அதிரடியாகக் காலி செய்தார் ராப்ரி தேவி!
பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆர்ஜேடி (RJD) கட்சியின் மூத்த தலைவருமான ராப்ரி தேவி, கடந்த இருபது ஆண்டுகாலமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரம்மாண்ட அரசு பங்களாவை நேற்று அதிரடியாகக் காலி செய்துள்ளார். பங்களாவிலிருந்து வெளியேறிய அவர், பாட்னாவில் உள்ள தனது சொந்த வீட்டிற்குக் குடியேறினார். கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான நிர்வாகம், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ராப்ரி தேவிக்கு பாட்னாவின் '10, சர்க்குலர் ரோடு' பகுதியில் அமைந்துள்ள இந்த சொகுசு பங்களாவை முறைப்படி ஒதுக்கியிருந்தது.
தற்போதைய பீகார் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நேர் எதிரே, ஆளுநர் மாளிகைக்கு மிக அருகில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த விஐபி பகுதியில் இந்த பங்களா அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டு காலமாக இந்த அரசு பங்களாதான் ராப்ரி தேவியின் இல்லமாகவும், அவரது கணவரும் ஆர்ஜேடி கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவின் முதன்மை முகாம் அலுவலகமாகவும் செயல்பட்டு வந்தது. பீகாரின் முக்கிய அரசியல் நகர்வுகள் மற்றும் ஆர்ஜேடி கட்சியின் வியூகங்கள் வகுக்கப்படும் முதன்மை மையமாக இந்த பங்களாவே திகழ்ந்தது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடி(யு) கட்சியுடன் ஆர்ஜேடி இணக்கமாக இருந்தவரை இந்த பங்களா எவ்விதப் பிரச்சினையுமின்றி லாலு குடும்பத்தினரின் வசம் நீடித்தது.
ஆனால், பீகாரில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு தற்போது சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, லாலு குடும்பத்தினருக்குக் கடுமையான நிர்வாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இந்த அரசியல் நெருக்கடியின் காரணமாகவே, ராப்ரி தேவி தனது 20 ஆண்டுகால அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அவர், சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கவுடில்யா நகரில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டிற்குத் தற்போது தங்குமிடத்தை மாற்றியுள்ளார். ராப்ரி தேவி காலி செய்துள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த '10, சர்க்குலர் ரோடு' பங்களா, தற்போது பீகார் மாநில பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான நந்த் கிஷோர் ராமுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv