“ராமர் கோயில் காணிக்கை திருட்டு!”: குற்றவாளிகளின் மாளிகைகளை புல்டோசரால் இடிக்க உ.பி. அரசு அதிரடி முடிவு!
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் பெறப்பட்ட காணிக்கைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, உ.பி. அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், அயோத்தி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட வைரம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை முழுமையாக மீட்பதுடன், திருடப்பட்ட நன்கொடைகளைக் கொண்டு குற்றவாளிகள் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்திலுள்ள கடும் குற்றவாளிகள் மீது பயன்படுத்தப்படும் 'குண்டர் சட்டத்தின்' கீழ், இவர்களின் சொத்துக்களையும் முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவரான லவ் குஷ் மிஸ்ரா, அயோத்திக்கு அருகே பிரம்மாண்டமான மாளிகை ஒன்றைக் கட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது. வெறும் 12,000 ரூபாய் மாதச் சம்பளம் பெற்ற இவர், தனது மனைவி பெயரில் இந்தச் சொத்தை வாங்கியிருப்பதும், அதற்கான அரசு அனுமதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மற்ற குற்றவாளிகளுக்குப் பாடமாக அமையும் வகையில், லவ் குஷ் மிஸ்ராவின் அந்தக் கட்டடத்தை புல்டோசர்கள் மூலம் இடிக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. தீவிரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உ.பி. அரசு வழக்கமாகக் கையாளும் இந்த அதிரடி நடவடிக்கை, தற்போது ராமர் கோயில் திருட்டு வழக்கிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் மேலும் பலர் சிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 5 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டால் விரைவில் மேலும் பல கைதுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நேற்று பணிபுரிந்த தனியார் பாதுகாப்புப் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், கோயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் மற்றும் மாநிலப் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ஒவ்வொரு 15 நாட்களுக்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணி இடங்கள் மாற்றப்படும் புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோ மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அயோத்தி வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். இதற்கான முறையான புகாரை அவர்கள் அயோத்தி நகரக் காவல் நிலையத்தில் நேற்று அளித்துள்ளனர். காணிக்கை திருட்டு என்பது பல நாட்களாக நடைபெற்றுள்ளதால், அதன் மொத்த மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடுவது போலீஸாருக்குச் சவாலாக உள்ளது. இருப்பினும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து திருடப்பட்ட காணிக்கைகளை முழுமையாக மீட்டெடுப்பதில் உ.பி. அரசு உறுதியாக உள்ளது.



AthibAn Tv