இருமுறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற கவிஞர் புவியரசு காலமானார்: இலக்கிய உலகம் பெரும் சோகம்!
கோவை: தமிழ் இலக்கிய உலகின் முன்னணி ஆளுமையும், இருமுறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளருமான கவிஞர் புவியரசு (96) இன்று கோவையில் காலமானார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனி பகுதியில் வசித்து வந்த அவர், முதுமை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகமும், எழுத்தாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் 1931-ம் ஆண்டு பிறந்த புவியரசுவின் இயற்பெயர் சு.ஜெகநாதன் ஆகும். கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இடைநிலை பட்டமும், பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ்த் துறை பட்டமும் பெற்ற இவர், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றிப் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கினார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவதற்காக நடைபெற்ற அறப்போராட்டங்களிலும், எல்லைப் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றுச் சிறை சென்ற பெருமைக்குரியவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியப் புரட்சியை ஏற்படுத்திய 'வானம்பாடி இலக்கிய இயக்கத்தை' தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1952-ம் ஆண்டு முதல் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. கவிதை, நாடகம், சொற்பொழிவு எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உலகப் புகழ்பெற்ற அறிஞர்களான ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, பியோதர் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் உன்னத படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராகத் தடம் பதித்தார். இவரது தனித்துவமான படைப்புகள் ஆங்கிலம், ரஷ்யன், ஹங்கேரி, சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நவீன நாடகங்களின் முன்னோடியாகக் கருதப்படும் இவர், பல்வேறு திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இவரது அசாத்திய இலக்கியப் பணிக்காகப் பல்வேறு உயரிய விருதுகள் இவரைத் தேடி வந்தன. வங்கக் கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் “தி ரெவலூஷனரி”-ன் தமிழ் மொழிபெயர்ப்பான ’புரட்சிக்காரன்’ நூலுக்காகக் கடந்த 2007-ம் ஆண்டு சாகித்ய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதைப் பெற்றார். தொடர்ந்து, 2009-ம் ஆண்டு இவரது புகழ்பெற்ற ‘கையொப்பம்’ கவிதைத் தொகுப்பிற்காகத் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இவர் எழுதிய ‘முக்கூடல்’ எனும் நூல் 2004-ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த புதுக்கவிதை நூலுக்கான பரிசைப் பெற்றது. தமிழ் மொழிக்கும், கவிதை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கவிஞர் புவியரசுவின் மறைவு அமைந்துள்ளது.

AthibAn Tv