அல்காரித ‘அலர்ட்’: உலகளவில் அதிகரிக்கும் பயன்பாடு - சமூக ஊடக ஆரோக்கியமாக கையாள்வது எப்படி?

Dina AthibAn
0


அல்காரித ‘அலர்ட்’: உலகளவில் அதிகரிக்கும் பயன்பாடு - சமூக ஊடக ஆரோக்கியமாக கையாள்வது எப்படி?

சென்னை: இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் (Social Media) இல்லாமல் எந்தவொரு மனிதரும் ஒரு நாளைக் கடக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 70 சதவீதம் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டில் 246 கோடியாக இருந்த பயனர்களின் எண்ணிக்கை, பத்தாண்டுகளில் (2026-க்குள்) 579 கோடியாக அசுரவளர்ச்சி பெற்று உயர்ந்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 94.7% பேர் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருவதோடு, ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் 21 நிமிடங்களை இதற்காகவே செலவிடுகின்றனர். இந்தியாவில் கடந்த 2025 ஜனவரி மாத ஆய்வின்படி, 49.1 கோடிப் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், வரும் 2029-ல் இந்த எண்ணிக்கை 130 கோடியாக உயர்ந்து, உலகளவில் முதலிடத்தில் இருக்கும் சீனாவையே இந்தியா முந்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பயனர்கள் சராசரியாக இரண்டரை மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவழிப்பதாகவும், அவர்களில் 40% பேர் 'ஜென்ஸீ' (Gen Z) எனப்படும் இளம் தலைமுறையினர் என்பதும் தெரியவந்துள்ளது.

‘சோஷியல் மீடியா அக்கவுண்ட் இருந்தால்தான் கெத்து’ என்கிற தற்பெருமை எண்ணமே பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. பிற தொழில்நுட்பங்களைப் போலவே இதையும் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் மிகச் சிலரிடமே உள்ளது. நாளும் பொழுதும் சமூக ஊடகத் தளங்களிலேயே மூழ்கிக் கிடப்பது மக்களின் ஆரோக்கியத்திற்கும், இளையதலைமுறையினரின் எதிர்காலத்திற்கும் உகந்தது அல்ல எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சமூக ஊடகங்களை ஆரோக்கியமாகப் பயன்படுத்த நேரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது மிக அவசியமாகும்; குறிப்பாக மாணவர்களுக்கான பயன்பாட்டு நேரத்தைப் பெற்றோரோ அல்லது வழிகாட்டிகளோ முறையாக நிர்ணயிக்க வேண்டும். மேலும், தங்களின் சுயவிவரங்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளைத் தொடர்ந்து பதிவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இணைய உலகில் கட்டமைக்கப்படும் போலிப் பிம்பங்களை நம்புவதை விடுத்து, உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் சந்தித்துப் பேசுவதே சிறந்தது. வாழ்க்கையைச் சமூக ஊடகங்களிலேயே வாழ முற்படுவது, நம்மைச் சுற்றிப் பெருங்கூட்டம் இருந்தாலும் நம்மைத் தனியாளாக மாற்றி மன அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.

அதேவேளையில், தொலைதூரத்தில் இருப்போரை எளிதாகத் தொடர்புகொள்வது, சந்தைப்படுத்துதல், தொழில் விளம்பர உத்திகள், தனிப்பட்ட திறன்களை வெளிப்படுத்துவது மற்றும் சமூக ஆதரவைத் திரட்டுவது எனப் பல நன்மைகளும் சமூக ஊடகங்களால் நிகழ்கின்றன. இதனை எதிர்மறையாகப் பயன்படுத்தும்போது மட்டுமே விளைவுகள் மோசமாகின்றன. நாம் எதனைத் தேடுகிறோமோ, அந்தத் தரவுகளை (Data) வைத்துக்கொண்டு நமது எதிர்காலத் தேர்வுகளை வடிவமைக்கும் வேலையைச் சமூக ஊடகங்களின் பின்னணியில் உள்ள ‘அல்காரிதம்’ (Algorithm) நுட்பமாகச் செய்கிறது. ‘நான் யார்’ என்று பயனர்கள் முடிவு செய்வதற்குப் பதிலாக, ‘நீ இப்படித்தான்’ என்று அவர்கள் மீது முத்திரை குத்தும் மறைமுக முயற்சிகள் இதன் மூலம் நடக்கின்றன. எனவே, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே சமூக ஊடகங்களில் செலவழிப்பேன் என்கிற தெளிவை மக்கள் வளர்த்துக்கொண்டால், சமூக ஊடகங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் தேவையான தகவல்களைப் பெறவும், சிறந்த உடல் மற்றும் மன வளத்தைப் பராமரிக்கவும் ஆரோக்கியமான இணையப் பயன்பாடே தற்போதைய அவசரத் தேவையாகும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!