“அமைச்சர் சரத்குமார் மீதான வீடியோ குற்றச்சாட்டு: ஆய்வு செய்து வருகிறோம்” - மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிரடித் தகவல்!

Dina AthibAn
0


“அமைச்சர் சரத்குமார் மீதான வீடியோ குற்றச்சாட்டு: ஆய்வு செய்து வருகிறோம்” - மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிரடித் தகவல்!

சென்னை: "மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையான விவகாரத்தில், அவர் அளித்துள்ள விளக்கங்களை அரசு தீவிரமாகச் சரிபார்த்து ஆய்வு செய்து வருகிறது; அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய கூட்டணி அரசியல் நிலவரம், திமுக-அதிமுக ரகசிய உடன்பாடு மற்றும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

திமுக - அதிமுக ரகசியக் கூட்டணி?

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது: "தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன், தங்களது குடும்பங்களையும், பெரும் சொத்துகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சியமைக்க மறைமுகமாக முயற்சித்தனர். இதற்குப் பாஜகவும் பின்புலமாக உதவியது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்ததை, தற்போது ஐயூஎம்எல் (IUML) தலைவர் காதர் மொய்தீன் தனது பேட்டியில் வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளார். இதனால்தான் திமுக கூட்டணியில் இருந்து பல முக்கியக் கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றன" என்றார்.

மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் 'தீய சக்தி' என்று கடுமையாக எதிர்க்கப்பட்ட திமுகவுடன் கூட்டணி சேர எடப்பாடி பழனிசாமி தயாரானதால், அதனை ஏற்க முடியாமல் அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் வெளியேறி வருவதாகச் சுட்டிக்காட்டினார். "இப்போதும் கூட ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் ஆகியோர் சில தொழிலதிபர்களுடன் இணைந்து, பல ஆயிரம் கோடி பணத்தை வைத்து குதிரை பேரத்தின் மூலமாக ஆட்சியைப் பிடிக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவிலும் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் பல எம்.எல்.ஏக்கள் இதற்கு உடன்படாமல் கடும் வருத்தத்தில் இருப்பதால், அங்கிருந்தும் பலர் விரைவில் வெளியேற வாய்ப்புள்ளது. தமிழக மக்கள் இந்த ரகசியப் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"தவெக கூட்டணிக்கு 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு"

தமிழகத்தில் தற்பொழுது அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசிய அமைச்சர், "தற்போது தவெக கூட்டணிக்கு 120 எம்.எல்.ஏக்களின் முழுமையான ஆதரவு இருக்கிறது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக திமுக செயல்படுவதாலேயே கூட்டணிக் கட்சிகள் வெளியேறுகின்றன. நேர்மையாக அரசியல் செய்யும் யாரும் இனி திமுகவுடன் பயணிக்க விரும்பமாட்டார்கள். கடந்த 2004-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரவையில் மதிமுகவுக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சர் பதவியை திமுகதான் பேரம் பேசி வாங்கிக்கொண்டது. அப்போதே பதவியைப் பெரிதாக எண்ணாத வைகோ, தற்போது மக்கள் தீர்ப்பை மதித்துத் தவெக பக்கமுள்ள நியாயத்திற்காக வெளியேறியுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் தங்களது கட்சிகளை ஒட்டுமொத்தமாகப் பாஜகவுடன் இணைத்துவிட்டு, குடும்பத்திற்கு ஒரு அமைச்சர் பதவியை வாங்கிக்கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று சாடினார். தவெக தலைமையிலான புதிய பலமான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் சந்திப்பு மற்றும் துணைவேந்தர் நியமனம்:

தமிழக ஆளுநர் அர்லேகரை அலுவல் ரீதியாகச் சந்தித்துப் பேசியது குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல் குமார், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பான முக்கியக் கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது ஆளுநரின் பணியாகும் என்றும், இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை ஆளுநர்தான் விளக்க வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!