“எங்களை ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்துப் பார்த்தாலும் நாங்களே மையம்” - விசிக தலைவர் திருமாவளவன் மேலூரில் அதிரடி முழக்கம்!
மதுரை: "தமிழக அரசியலில் எங்களை எவ்வளவுதான் ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்துப் பார்க்க நினைத்தாலும், நாங்கள்தான் அரசியல் களம் இயங்குவதற்கான அச்சாணி மற்றும் மையம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம்; விசிக இன்றி தமிழக அரசியல் இனி இயங்காது" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தீர்க்கமாகப் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் நினைவிடத்தில், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விசிகவின் அசுர சாதனை:
பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: "காலமெல்லாம் விசிகவின் மீதும், என் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு அவதூறுகளைப் பரப்புபவர்களே சூழ்ந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான சிலர் கட்சிக்கு வந்தார்கள், சென்றார்கள். அவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு வெளியேறி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். 'மேலவளவுக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு?' என்று சில சில்லறைகள் பேசி வருகின்றன. ஆனால் இன்றைக்குத் தமிழகம் முழுவதும் தலித் அரசியல் முதன்மையாகப் பேசப்படுகிறது. ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக அறிவிக்கப்படுகிறார் என்ற நிலையை விசிக உருவாக்கியுள்ளது. 'தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வர் ஆகக்கூடாதா? அதிலும் குறிப்பாகத் திருமாவளவன் கூடாதா?' என்ற விவாதத்தை அரசியல் களத்தில் எழுப்பியதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆகப்பெரும் சாதனைதான். சாதி உணர்வால் நாம் வளரவில்லை; மக்கள் சக்தியால் வளர்ந்துள்ளோம். முன்பு இரண்டு சீட் என்று நம்மை எள்ளி நகையாடியவர்களுக்கு இன்றைக்கு நமது அருமையும், தீர்மானிக்கும் ஆற்றலும் நன்றாகவே புரிந்திருக்கும்" என்றார்.
ஊடகங்களின் இரட்டை நிலைப்பாடு:
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே தமிழகத்தில் தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்படும் என்று தான் கணித்துக் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், அதனால்தான் தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறியதாகத் தெரிவித்தார். "எல்லா அரசியல் கட்சிப் பிரச்சினைகளுக்கும் நானே பதிலளிக்க வேண்டும் என ஊடகங்கள் நினைக்கின்றன. நான் ஏன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என்ற காரணத்தை திமுக தலைவரிடமோ, மூத்த தலைவர்களிடமோ யாரும் கேள்வி எழுப்பவில்லை. திமுகவில் 60 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை; ஆனால் நான் 3 பேருக்கு மட்டும் வாய்ப்பு வழங்காதது பெரிய விவாதப் பொருளாக்கப்படுகிறது. அதேபோல, அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் வெளியேறிய முரண்பாடுகள் பற்றி யாரும் பேசுவதில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் அந்த எம்.எல்.ஏக்களுக்கும் இடையே என்ன பிரச்சினை என்று அவரிடம் கேட்காமல், என்னிடம் வந்து கேள்வி எழுப்புகின்றனர். அதிமுக எம்.எல்.ஏ தவெகவில் இணைவது குறித்து தவெக தலைவரிடம் கேட்க யாரும் முன்வருவதில்லை. இத்தகைய பாரபட்சமான அரசியல் சூழலில்தான் திருமாவளவன் தாக்குப் பிடித்து நிற்கிறான்" என்று சாடினார்.
அமைச்சர் வன்னியரசுவின் செயல்பாடுகள்:
விசிக சமூக நீதித்துறையை விடுத்து வேறு நல்ல துறையைக் கேட்பதாக வரும் விமர்சனங்களை மறுத்த அவர், "அப்படி ஒரு சூழலே எழவில்லை. இத்துறையில் அமைச்சர் வன்னியரசு மிகச் சிறப்பாகப் பணிபுரிவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இடைத்தேர்தலில் நிற்க மாட்டேன் என்றும், அமைச்சரவையில் நான் இடம்பெற மாட்டேன் என்றும் தீர்க்கமான முடிவெடுத்த பிறகும், நான் பதவிக்காக அழுத்தம் கொடுப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். நமது இயக்கத்திற்குக் கிடைத்த முதல் அமைச்சர் வாய்ப்பு தென்மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி வன்னியரசுக்குக் கிடைத்துள்ளது. இது தென் மாவட்டத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை" என்றார்.
"கூட்டணி ஆட்சியைப் பாதுகாப்போம்"
தமிழக அரசியல் வரலாற்றில் எவராலும் சிந்திக்க முடியாத புரட்சிகரமான, துணிச்சலான முன்னெடுப்புகள் தற்போதைய புதிய ஆட்சியில் நடந்துள்ளதாகப் பாராட்டிய திருமாவளவன், சாதி, மத மரபுகளைக் கடந்து செயல்பட முடியும் என்பதற்குச் சான்றாக அமைச்சரவையில் 8 தலித் சமூகத்தினருக்கும், கூடுதலாகத் துணை சபாநாயகர் பொறுப்பு என மொத்தம் 9 பேருக்குப் பிரதிநிதித்துவ வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரப் பிரதிநிதித்துவமும் இன்றைக்கு மலர்ந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டணி ஆட்சியைப் பாதுகாத்து, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறதோ இல்லையோ, அதைவிடக் கூடுதலாக நமக்கு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே விசிகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மிகத் துணிச்சலாக அமையும்" என்று திருமாவளவன் தனது உரையில் பிரகடனப்படுத்தினார்.

AthibAn Tv