“தரவுகளைப் பகிர புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்களுக்கு 15 நாள் கெடு” - தவறினால் 10% மின் கணக்கீடு கழிக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி எச்சரிக்கை!

Dina AthibAn
0

“தரவுகளைப் பகிர புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்களுக்கு 15 நாள் கெடு” - தவறினால் 10% மின் கணக்கீடு கழிக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை (Real-Time Data) உடனுக்குடன் தமிழ்நாடு மின்வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், இதில் தவறும் நிறுவனங்களின் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீடு கழித்து கணக்கிடப்படும் என்றும் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், மாநில மின் கட்டமைப்பைப் பாதுகாப்பாகவும், சீராகவும் இயக்குவதற்கு இந்த நடவடிக்கை மிக அவசியமானது எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில், மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திதான் பூர்த்தி செய்து வருகிறது. இருப்பினும், இவ்வகை மின் உற்பத்தியானது இயற்கை சூழலைப் பொறுத்து அடிக்கடி மாறுபடும் தன்மை கொண்டது என்பதால், மாநில மின் கட்டமைப்பை (State Grid) எவ்வித தொய்வுமின்றிச் சீராகவும், சிக்கனமாகவும் இயக்குவதற்கு நிகழ்நேர (Real-Time) தகவல்கள் மின்வாரியத்திற்கு மிக அவசியமாகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 'தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதிமுறை – 2026'-இன் படி, அனைத்து பசுமை மின் உற்பத்தி நிலையங்களும் மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் (SLDC) நவீன கணினி அடிப்படையிலான 'ஸ்காடா' (SCADA) தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேர தரவுத் தொடர்பு வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "தற்போது தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரியசக்தி திட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்ட மின் உற்பத்தியாளர்கள் உள்ள போதிலும், அவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தங்களது நிகழ்நேர தரவுகளை மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர். மீதமுள்ள சுமார் 90% பசுமை மின் உற்பத்தியாளர்கள், பலகட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகும் இதுவரை தரவுகளை வழங்கவில்லை. இதன் காரணமாக, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் (SLDC) கடந்த 30.05.2026 அன்று 15 நாட்கள் காலக்கெடு விதித்து இறுதி அறிவிப்பு கடிதத்தை அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் அனுப்பியுள்ளது. மத்திய அரசின் தென்மண்டல மின் ஆற்றல் குழுவின் (SRPC) தொடர் வலியுறுத்தல்கள் போன்ற சட்டரீதியான மற்றும் தொழில்நுட்பரீதியான காரணங்களினால் இந்த காலக்கெடுவை இனி நீட்டிக்க இயலாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அறிவிப்பு கடிதம் பெற்ற 15 நாட்களுக்குள் SCADA மூலம் நிகழ்நேர தரவுகள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் முதற்கட்டமாக 10% மின் உற்பத்தியும், 30 நாட்களுக்குப் பிறகு முழு மின் உற்பத்தியும் மின் அனுப்புகை மற்றும் விலகல் கணக்கீட்டு செயல்முறைகளில் இருந்து விலக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும், 45 நாட்களுக்குப் பின்னரும் தரவுகள் ஒருங்கிணைக்கப்படவில்லையெனில், மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) விதிமுறைகளின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கேற்ப நடப்பு ஜூன் 2026 மாதத்திற்கான மின் ஆற்றல் கணக்கீடு மற்றும் சரிசெய்தல் பணிகள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோருக்கு இடையூறில்லாத தரமான மின் விநியோகம் வழங்க அனைத்து உற்பத்தியாளர்களும் உடனடியாக மின்வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!