“என்னை நம்பி வந்தோருக்கு பதவி இல்லை; எனக்கும் பொறுப்பு வேண்டாம்” - அதிமுகவில் மீண்டும் போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி!
கோவை: "எனக்கு வழங்கப்பட்ட அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இல்லை; என்னை நம்பி என் பின்னால் நின்ற மாவட்ட செயலாளர்களுக்குப் பதவி தராதபோது, நான் மட்டும் எப்படிப் பதவியை ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் ஒரு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கடுமையான பிளவு ஏற்பட்டது. அப்போது வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த அதிரடி அரசியல் நகர்வால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணி தரப்பினரின் முக்கியக் கட்சிப் பொறுப்புகளைப் பறித்தார். அதன் பின்னர் இரு தரப்புக்கும் இடையே சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பறிக்கப்பட்ட முக்கியப் பொறுப்புகள் அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிருப்தியால், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தனர். இதற்கு முன்னதாகவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், அண்மையில் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சிலருக்குக் கட்சியின் மாநில அளவிலான பொறுப்புகள் மறுபடியும் வழங்கப்பட்டன. எனினும், அவர்களது பலமான மாவட்டச் செயலாளர் பதவிகள் திரும்பத் தரப்படவில்லை; அதேபோல சி.வி.சண்முகத்திற்கு எந்தவொரு கட்சிப் பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கோவையில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "என்னை நம்பி என்னோடு 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்து, கஷ்டப்பட்டவர்கள். சி.வி.சண்முகம், வீரமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களின் அரசியல் ஜாம்பவான்கள் மற்றும் கட்சியை வளர்த்தவர்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் பதவியும் வழங்கப்படாத நிலையில், எனக்குக் கொடுக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் பதவியை நான் மட்டும் தனித்து ஏற்றுக்கொள்வது நியாயமல்ல" என்று போர்க்கொடி தூக்கியுள்ளார். வேலுமணியின் இந்த அதிரடிப் பேச்சு அதிமுக தலைமைக்கு மீண்டும் ஒரு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

AthibAn Tv