போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நீடித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்சில் போலீஸ்காரர் ஒருவர் ஏறி டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். இதனால் பஸ் டிரைவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய முடியும் என போக்குவரத்து துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக கடந்த 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனால், போலீசாருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் இடையே மோதல் நீடித்தது.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் செயல்தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதின.
இதையடுத்து, போக்குவரத்து துறை செயலர் பனீந்திர ரெட்டி, உள்துறை செயலர் அமுதாவை சந்தித்து, பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் சுமூகமாக பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


AthibAn Tv