Type Here to Get Search Results !

அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக திரண்டு வந்து அஞ்சலி

 ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஈரான் மற்றும் அஜர்பைஜான் இடையே ஓடும் அரஸ் ஆற்றின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து ஒரு பெரிய அணையை கட்டியுள்ளன. இதனை திறந்து வைப்பதற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கடந்த 19ம் தேதி அஜர்பைஜான் சென்றார். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகளும் சென்றிருந்தனர். அணை திறப்பு விழாவை முடித்துக் கொண்டு அதிபர் இப்ராகிம் ரைசி உள்ளிட்டோர் 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் ஈரானுக்கு புறப்பட்டனர்.

ஈரானின் தப்ரிஸ் நகரில் 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் உசைன் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போனது.

அதைத்தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் மலைப்பகுதியில் மர்ம ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த அதிபர் ரைசி உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஈரானையே சோகத்தில் ஆழ்த்தியது. ஈரான் நாட்டில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மே 22ஆம் தேதி தகனம் செய்யப்படும் என்றும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிபர் இப்ராகிம் ரைசி உள்பட 9 பேரின் இறுதிச்சடங்கு தலைநகர் டெஹ்ரானில் நேற்று நடந்தது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு மத சடங்குகளை செய்தார்.

உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் ஈரானியக் கொடியால் மூடப்பட்டிருந்தன. மேலும் ஒவ்வொரு சவப்பெட்டியிலும் இறந்தவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

மத வழிபாடுகளுக்குப் பிறகு, சவப்பெட்டிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சவப்பெட்டிகள் ஏற்றப்பட்ட ஒரு சவப்பெட்டி மக்கள் வெள்ளத்தில் மெதுவாக ஊர்ந்து சென்றது. ஊர்வலம் டெஹ்ரான் நகரத்தின் வழியாகச் சென்று ஆசாதி சதுக்கத்தை அடைந்தது.

பல வெளிநாட்டு தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் சார்பில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் இறுதிச் சடங்கில் பங்கேற்று, மறைந்த ஜனாதிபதி இப்ராகிம் ரைசிக்கு அஞ்சலி செலுத்தினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.