திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலாகிறது.

திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. மலையே சிவபெருமான் என்று போற்றப்படுவதால், இக்கோயிலின் பின்புறமுள்ள மலையைச் சுற்றி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் வைகாசி மாத பௌர்ணமி நேற்று இரவு 7.09 மணிக்கு தொடங்கியது. பௌர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இரவு பௌர்ணமி தொடங்கியதையடுத்து, பகலில் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் நேற்று வைகாசி விசாகம் என்பதால் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வர லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்திருந்தனர்.
கோவிலுக்கு பக்தர்கள் விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு வெளியே மட்டுமின்றி கோயிலுக்குள்ளும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்துக்கும் மேல் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு மோர், குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டன.
பகலில் ஏராளமான பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றாலும், மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பௌர்ணமி கிரிவலம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.44 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.


AthibAn Tv