Type Here to Get Search Results !

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை....

 தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

ஆரஞ்சு நிற எச்சரிக்கை

இந்நிலையில் தென் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி, தென்காசி, நெல்லை, கன்யாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 25 முதல் 28ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு-தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

அதன்பிறகு, அது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் 25ஆம் தேதி மாலை நிலவும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதனால் மீனவர்கள் வரும் 26ம் தேதி வரை கன்யாகுமரி கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பலத்த காற்று வீசும் என்பதால் மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு - மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் வடகிழக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடல், வடமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு 26ம் தேதி செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென் மேற்கு பருவக்காற்று

தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான், தெற்கு வங்கக்கடல் மற்றும் கன்யாகுமரி கடலின் சில பகுதிகளில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. தற்போது பருவமழை படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்த வகையில் தென் அரபிக்கடல், மாலத்தீவின் பல பகுதிகள், குமரி கடல், தெற்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே மே 31-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.