வைகாசி விசாக திருவிழாவையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

சென்னையிலுள்ள பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவில் தினமும் மங்களகிரி விமானத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, சூரியப் பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுகிட வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு யவி உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. 21ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகம், 22ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் வீதிஉலாவும், 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், கலசாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், திருகல்யாண உற்சவமும், மயில் புறப்பாடும் நடக்கிறது. பின்னர் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. 23ம் தேதி இரவு சிறப்பு புஷ்ப பல்லக்கில் புறப்பாடு, சுப்ரமணியர் வீதி உலா நடக்கிறது.
அதன்பின், 24ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை வைகாசி விசாக பிரம்மோத்ஸவ வித்யாமர்த்தி நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்நாட்களில் தினமும் மாலையில் பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு போன்றவை நடைபெறுகின்றன.


AthibAn Tv