Type Here to Get Search Results !

நியூ கலிடோனியாவில் கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு அவசர நிலையை பிரான்ஸ் பிரகடனம்

 நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியினரின் உரிமைகள் பிரான்சின் புதிய சட்டத்தால் புறக்கணிக்கப்படும் என்று கூறி போராட்டங்களில் கலவரங்கள் வெடித்தன.

நியூ கலிடோனியா பிரெஞ்சு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு. பிரான்சில் இருந்து 17,000 கி.மீ. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இப்பகுதி மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது நியூ கலிடோனியாவின் பழங்குடியான கனக் மக்கள், ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் வழித்தோன்றல்களுக்கு தாயகமாக உள்ளது.

இந்த பகுதி 1853 இல் பிரான்சுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் பூர்வீக குடிமக்களான கானாக் பழங்குடி மக்களுக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் இடையே மோதல் இருந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. நியூ கலிடோனியாவில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் பிரெஞ்சு குடியிருப்பாளர்கள் மாகாண தேர்தல்களில் வாக்களிக்க சட்டம் அனுமதிக்கிறது. சில உள்ளூர் தலைவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்தனர். புதிய சட்டம் உள்ளூர் கனக் வாக்குகளை நீர்த்துப்போகச் செய்யும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். கானாக் மக்கள் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தப் பிரச்னை தீவிரமடைந்ததால், நியூ கலிடோனியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கனாக் பழங்குடியின மக்களின் உரிமைகளை சட்டம் புறக்கணிக்கும் என்று கூறி கனக் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களில் கலவரம் வெடித்தது. பிரெஞ்சு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பல நகரங்கள் போர்க்களம் போல் காட்சியளித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சு பேருந்துகள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.

கலவரத்தில் 3 கனக் இளைஞர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை தொடர்ந்து போராட்டத்தை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் நௌமியாவில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை 12 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. வன்முறை மற்றும் வதந்திகளைத் தடுக்க அதிகாரிகள் டிக்டோக் செயலியைத் தடை செய்துள்ளனர்.

நியூ கலிடோனியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்களும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. போராட்டத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த பிரான்சில் இருந்து அதிகளவான பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், நியூ கலிடோனியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.