
சீனா மற்றும் பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலமும் வேண்டாம். அண்டை நாடுகளின் அமைதியையும், நட்பையும் தான் இந்தியா விரும்புகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
லடாக் எல்லை பகுதியில் இந்தியா - சீனாவிற்கு இடையே நடந்த மோதல் மற்றும் வீரர்கள் குவிப்பு போன்றவற்றால் இரு நாடுகளின் எல்லையிலும் பதற்றம் உண்டானது. தற்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது. சீன அரசு, இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் அவ்வப்போது தேவையற்ற மற்றும் சதித்திட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் நேற்று நடந்த பா.ஜ கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இது குறித்து பேசியதாவது : பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்று நாட்டில் பல்வேறு சாதனைகளை செய்து காட்டியுள்ளது. அதில் மிக சாதனை, நாட்டில் அமைதியை நிலைநாட்டி, தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கி உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்தியதும், எல்லைப் பகுதியை வலுப்படுத்தியது தான். மாவோயிஸ்ட் தொடர்பான பிரச்னையை முடிந்தஅளவு கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி கண்டுள்ளோம். அத்துடன் பாக்., ஆதரவு தீவிரவாத செயல்களையும் கட்டுப்படுத்தியது.
இந்தியாவின் ஒரு எல்லையில் பாக்.,கும், மறு எல்லையில் சீனாவும் உள்ளன. சீனா அல்லது பாகிஸ்தானின் நிலத்தை இந்தியா கைப்பற்ற விரும்பவில்லை, அங்கிருந்து ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா ஆக்கிரமிப்பு செய்யாது. நாங்கள் விரும்புவது எல்லாம் அமைதியையும், அகிம்சையையும் தான்.
ஆக்கிரமிப்பு செயல்கள் மூலம் இந்தியாவை வலுவான நாடாக்க மாட்டோம். அமைதி ஏற்படுத்துவதில் வலிமையான நாடு என்ற நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம். இந்தியாவுக்குத் தேவை வலிமையான அமைதியான சூழல்தான். பூடான், சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றின் நிலப்பகுதியை இந்தியா விரும்பியதில்லை. தேவையும் இல்லை. வங்கதேசப் போரின் போதுகூட, போரில் வென்றபின், அந்நாட்டின் பிரதமராக முஜிபுர் ரஹ்மானை அமரவைத்துவிட்டு இந்திய ராணுவம் திரும்பிவந்துவிட்டதே தவிர அந்நாட்டைக் கைப்பற்றவில்லை. கொரோனா பிரச்னை நீண்ட காலம் நீடிக்காது. அதற்கு விஞ்ஞானிகள் விரைவில் மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கூறினார்.


AthibAn Tv