"9-ஆம் வகுப்பில் 3-வது மொழியைக் கட்டாயமாக்கி மாணவர்களுக்கு மன அழுத்தம் தராதீர்கள்" - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
புதுடெல்லி:
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியைக் கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது. இவழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்னா அமர்வு, 9-ஆம் வகுப்பு என்பது பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்கனவே மன அழுத்தம் நிறைந்த ஒரு காலகட்டம் என்பதால், அந்த நேரத்தில் ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்துவது தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியது.
மும்மொழித் திட்ட விவாதமும் நீதிமன்றத்தின் கேள்வியும்:
விசாரணையின் போது தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களைத் தமிழக அரசு எதிர்ப்பதற்குக் காரணி, அதில் மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதுதான்" என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த நீதிபதி நாகரத்னா, "இத்திட்டத்தில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு இந்திய மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றுதான் உள்ளதே தவிர, எங்கும் இந்தி மொழி என்று குறிப்பாகக் கட்டாயப்படுத்தப்படவில்லை" என்று தெரிவித்தார். தொடர்ந்து குறுக்கிட்ட தன்னார்வ தொண்டு நிறுவன வழக்கறிஞர் பிரியதர்ஷினி, தேசியக் கல்விக் கொள்கை எந்தவொரு மாநிலத்தின் மீதும் எம்மொழியையும் திணிக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், இந்த 3-வது மொழி 9-ஆம் வகுப்பில் இருந்துதான் கட்டாயமாக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டபோது, "அதை ஏன் 6-ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்தக் கூடாது? 8-ஆம் வகுப்பின் இறுதியிலேயே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மன அழுத்தம் தொடங்கிவிடும் சூழலில் 9-ஆம் வகுப்பில் இதனைத் திணிப்பது மிகவும் தவறானது" என்று நீதிபதி அதிருப்தி வெளியிட்டார்.
மத்திய அரசுப் பள்ளிகளைத் தடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்:
தொடர்ந்து தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதி நாகரத்னா, "மாநில அரசுக்கெனத் தனிப்பட்ட கல்வி முறை இருக்கலாம். ஆனால், அதைக் காரணம் காட்டி ஏழை மாணவர்களுக்குப் பயன்படும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் அமைக்கத் தடுக்காதீர்கள்; இது மத்திய அரசின் திட்டம் என்பதால் நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்மறை மனப்பான்மை வேண்டாம்" என்று குறிப்பிட்டார். நவோதயா பள்ளிகளுக்கான இடத்தைத் தேர்வு செய்யத் தமிழக அரசுக்கு ஏற்கனவே 6 வாரக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்துத் தகுந்த அரசாங்க அறிவுறுத்தல்களைப் பெற்றுத் தெரிவிக்கத் தமிழக அரசுத் தரப்பில் மேலும் 6 வாரக் கால அவகாசம் கோரப்பட்டது. நீதிமன்றம் இந்த அவகாசத்தை வழங்கி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

AthibAn Tv