செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு: சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!
மதுரை:
வருமான வரித்துறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாகத் தளர்த்தியுள்ளது. அதன்படி, அவர் கரூர் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திடுவதற்குப் பதிலாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலேயே கையெழுத்திட நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கரூரில் உள்ள அசோக்குமாரின் வீட்டில் சோதனையிட வந்த வருமான வரி அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்து முட்டுக்கட்டை போட்டதாக அவர் மீது கரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவழக்கில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கரூர் மற்றும் சென்னை நிபந்தனைகளால் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்:
இந்த வழக்கில் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த கால உத்தரவில், நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து சனிக்கிழமைகளில் கரூர் நகரக் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருந்தது. இதற்கிடையே, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் பேசியதாக அசோக்குமார் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸாரும் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியபோது, அவர் தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்று கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டது.
நிபந்தனையை மாற்றி அமைத்த உயர் நீதிமன்றம்:
ஒரே நேரத்தில் சென்னையில் தினமும் ஆஜராக வேண்டிய சூழலும், சனிக்கிழமைகளில் கரூருக்குச் சென்று கையெழுத்திட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டதால், இந்த இரு வேறு நிபந்தனைகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதில் தனக்குப் பெரும் சிரமம் உள்ளதாகக் கூறி அசோக்குமார் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நிபந்தனை தளர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிபதி ராஜசேகர், மனுதாரரின் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அவர் கரூர் நகரக் காவல் நிலையத்தில் சனிக்கிழமைகளில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக, இனி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலேயே ஆஜராகிக் கையெழுத்திடலாம் என நிபந்தனையை மாற்றி அமைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

AthibAn Tv