"ஒரு உள்ளாட்சி எல்லையில் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி மயானத்தைப் பயன்படுத்த முடியாது" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை:
ஒரு உள்ளாட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அடக்கம் அல்லது தகனம் செய்யும் இடத்தைப் பயன்படுத்த சட்டப்படி உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரு கிராமங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வந்த மயானப் பயன்பாட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
வழக்கின் பின்னணியும் கிராம மக்களின் எதிர்ப்பும்:
தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு அருகாமையில் இருக்கிறது என்ற காரணத்திற்காக ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுக்குவாடன்பட்டி கிராம மயானத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்குச் சுக்குவாடன்பட்டி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. சுக்குவாடன்பட்டி கிராம மக்கள் தங்களது சொந்தப் பணத்தில் நிலம் வாங்கி, தகன மேடை அமைத்து அதனை ஊஞ்சாம்பட்டி ஊராட்சியிடம் ஒப்படைத்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட அமைதிக் கூட்டங்களிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில்தான், பொம்மையகவுண்டன்பட்டி மக்கள் நீதிமன்றத்தை நாடினர்.
உயர் நீதிமன்றத்தின் சட்ட விளக்கம்:
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கண்ணியமான மரணத்திற்கான உரிமை என்பது இறந்த பிறகும் ஒருவரது உடலுக்கு உண்டு. எனினும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி, ஒரு உள்ளாட்சி அமைப்பு தனது எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யக் கடமைப்பட்டுள்ளது. அதில் வெளிப்பகுதியைச் சேர்ந்தவர்களைக் கணக்கில் கொள்ள முடியாது. இந்துக்களுக்கான தகன மேடையில் சாதி ரீதியான பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புக்கு எதிரானது. ஆனால், இறந்த நபர் உள்ளூரைச் சேர்ந்தவர் அல்ல என்று கூறி தகன மேடையைப் பயன்படுத்த அதன் பொறுப்பாளர் மறுத்தால் அது சட்ட மீறல் ஆகாது" என்று தெளிவுபடுத்தினர். பொம்மையகவுண்டன்பட்டி வாசிகள் தேனி-அல்லிநகரம் நகராட்சியின் எரிவாயு தகன மேடையை மட்டுமே பயன்படுத்த சட்டப்படி உரிமை கொண்டுள்ளனர் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

AthibAn Tv