“தகிடுதத்த வேலைகளை விடுத்து ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தைச் செயல்படுத்துக” - தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
சென்னை:
“வாய்ச் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் காப்பாற்ற முயல்வது போன்ற தகிடுதத்த வேலைகளையெல்லாம் முழுமையாகக் கைவிட்டுவிட்டு, தமிழக விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை மத்திய அரசின் துணையோடு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களை ‘தூய சக்தி’ என்று அழைத்துக்கொண்டு ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு, தமிழக மக்களுக்காகப் புதிதாக எதையும் செய்யத் தேவையில்லை என்றும், கடந்த கால ஆட்சிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல திட்டங்களைத் தொடங்கினாலே போதும் என்றும் தவெக அரசின் முதலமைச்சரைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தின் தொடக்கமும் முன்னேற்றமும்:
தமிழகக் காவிரிப் படுகைகளைப் புத்துயிர் பெறச் செய்யவும், ஆறுகள் மாசுபடுவதைத் தடுத்து மேம்படுத்தவும் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற உன்னதத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி விவரித்துள்ளார். இதற்காக ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பாரதப் பிரதமரிடம் நேரில் வழங்கி வலியுறுத்தப்பட்டதாகவும்; கொள்கை அளவில் மத்திய அரசால் ஏற்கப்பட்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் பெறப்பட்ட நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு சுமார் ரூ.935 கோடிக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் செலவிட ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக மீது கடனாளிக் குற்றச்சாட்டு - தவெக-விற்கு எச்சரிக்கை:
கடந்த கால திமுக அரசு 2024-ஆம் ஆண்டு முதல் ஆட்சியை விட்டு இறங்கும் வரை இத்திட்டத்திற்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று வீண் விரயம் செய்த திமுக அரசு, உரிய மாநில நிதியை ஒதுக்காமல் மத்திய அரசின் பங்கையும் பெறாமல் இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டதாகச் சாடினார். அப்போதே பணிகளைத் துவக்கியிருந்தால் இந்நேரம் முதற்கட்டப் பணிகள் 30 சதவீதம் முடிந்திருக்கும் என்றும் அவர் கூறினார். எனவே, தற்போதைய தவெக அரசு, மக்கள் விரோத திமுக அரசால் முடக்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தூசி தட்டித் தொடங்கி, விவசாயப் பெருமக்களின் தேவைகளையும் குடிநீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

AthibAn Tv