Type Here to Get Search Results !

தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வாரத் தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு அனுமதி: நீர்வளத்துறை புதிய வழிகாட்டுதல் வெளியீடு!

தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வாரத் தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு அனுமதி: நீர்வளத்துறை புதிய வழிகாட்டுதல் வெளியீடு!

சென்னை:

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தனியார் அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள் தங்களது சொந்த நிதியைப் பயன்படுத்திப் புனரமைப்பதற்கான புதிய தொழில்நுட்ப வழிகாட்டு நெறிமுறைகளை மாநில நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை மீட்டெடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தற்போது 22,051 சிறுபாசன ஏரிகள் மற்றும் 69,777 குளங்கள், ஊரணிகள் உள்ளன. இவை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்றவற்றின் கீழ் தொடர்ந்து புனரமைக்கப்பட்டு வந்தாலும், இன்னும் கணிசமான நீர்நிலைகளின் முழுமையான நீர் தேக்கத்திறன் மீட்டெடுக்கப்படவில்லை. எனவே, பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி (CSR), தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று எஞ்சிய நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அனுமதி பெறும் நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பின்வரும் நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது:

  • திட்ட அறிக்கை சமர்ப்பித்தல்: தூர்வார விரும்பும் நிறுவனங்கள் தங்களது விரிவான திட்ட அறிக்கையை (DPR) மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • 15 நாள் கெடு: விண்ணப்பத்தின் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) 15 நாட்களுக்குள் களஆய்வு செய்து, ஆட்சியருக்குத் தனது பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். அதன் பின் ஊரக வளர்ச்சித் துறை தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும்.

  • 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானதில் இருந்து 3 மாதங்களுக்குள் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். இதற்கான டெண்டர் கோரும் முறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடக்க வேண்டும்.

  • மறு-தூர்வாரலுக்குத் தடை: கடந்த 3 ஆண்டுகளில் வேறு ஏதேனும் அரசுத் திட்டங்களின் கீழ் புனரமைக்கப்பட்ட நீர்நிலைகளை மீண்டும் தூர்வாரத் தேர்வு செய்யக்கூடாது.

வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசம்; சொந்த நிதியில் பணிகளை மேற்கொள்ளலாம்!

தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த நிதியில் நேரடியாகப் பணிகளை மேற்கொள்ளலாம். இல்லையெனில், மாவட்ட நிர்வாகத்திடம் நிதியை வழங்கி அரசே பணிகளைச் செய்யக் கோரலாம் அல்லது தூர்வாருவதற்கான இயந்திரங்களை மட்டும் இலவசமாக வழங்கியும் உதவலாம். தேவையெனில், கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ‘வி பி கிராம் ஜி’ (வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்) திட்டத்துடன் ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம்.

மேலும், நீர்நிலைகளில் இருந்து தூர்வாரி எடுக்கப்படும் உபரி களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் ஜல்லி போன்றவற்றை விவசாயிகளின் வேளாண் பயன்பாட்டிற்கும், பொதுமக்களின் வீட்டுப் பயன்பாட்டிற்கும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தூர்வாரும் பணிகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், தேவைப்படின் இந்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.